வேங்கைவயல் விவகாரம் : டிஎன்ஏ பரிசோதனைக்கு முன்பு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் உத்தரவு..!

துரை: புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு..

வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் சிபிசிஐடி டிஎஸ்பி குடிநீரில்மனிதக் கழிவுகளை கலந்தவர்களை கண்டுபிடிப்பதற்கு பதில்பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்களை குற்றவாளியாக்க முயன்று வருகிறார்.

இந்த சம்பவத்தில் தொடர்பு இல்லாத என்னையும், சுபா என்பவரையும் டிஎன்ஏ பரிசோதனைக்கு வருமாறு சம்மன் அனுப்பியுள்ளனர். இது சட்டவிரோதம். சிபிசிஐடி டிஎஸ்பி என்னை தொடர்ந்து மிரட்டி வருகிறார். டிஎன்ஏ பரிசோதனை தொடர்பாக புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, டிஎன்ஏ பரிசோதனைக்கு வருமாறு கட்டாயப்படுத்தக்கூடாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி இளங்கோவன் பிறப்பித்த உத்தரவு. வேங்கைவயல் வழக்கில் யார், யாருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என விசாரணை நீதிமன்றத்தில் மனு அளிக்க வேண்டும்.

அதன் பிறகே டிஎன்ஏ சோதனை நடத்த வேண்டியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் பெற்று நீதிபதி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.