விபத்தில் மூளைச் சாவு அடைந்த இளைஞரின் 6 உடல் உறுப்புகள் தானம்..

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் 6 உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் நடராஜ் (27). இவர் கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை)
அவிநாசி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானார். திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இங்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் செப்டம்பர் 17 ஆம் தேதி (சனிக்கிழமை) இளைஞருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவது குறித்து இளைஞரின் பெற்றோரிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர். உடல் உறுப்புகளை தானமாக வழங்க இளைஞரின் பெற்றோர் சம்மதித்ததையடுத்து செப்டம்பர் 18 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இளைஞரின் இரண்டு கண்கள், இரண்டு சிறுநீரகங்கள், இருதயம், கல்லீரல் ஆகிய 6 உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. இதில் இரண்டு கண்களும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் கோவை அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிக்கும், மற்றொரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிக்கும், இருதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கல்லீரல் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டுள்ளதாக அரசு மருத்துவமனை முதல்வர் அ.நிர்மலா தெரிவித்துள்ளார். மூளைச்சாவு அடைந்த இளைஞர் அளித்த உடல் உறுப்புகள் தானம் மூலம் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. உடல் உறுப்புகள் அறுவை சிகிச்சைக்குப் பின் இளைஞரின் உடல் பெற்றோரிடம் வழங்கப்பட்டது. முன்னதாக இளைஞரின் உடலுக்கு முதல்வர் அ.நிர்மலா, மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.