கோவையிலிருந்து கேரளாவுக்கு தினமும் 5,000 லோடு கனிம வளம் கடத்தல் – வேலுமணி குற்றச்சாட்டு.!

கோவை: கோவை மாநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட வடக்கு சட்டசபை தொகுதிகளுக்கான அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம், சங்கனுார் ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது.கூட்டத்துக்கு பின், முன்னாள் அமைச்சர் வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:தமிழக சட்டசபையில், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, சட்டம் – ஒழுங்கு பற்றி இரண்டு மணி நேரம் பேசினார்; அவை வெளியே வரவில்லை.
சட்டம் – ஒழுங்கு மிகவும் கெட்டு விட்டது.கோவையில் இருந்து கேரளாவுக்கு ஒருநாளைக்கு, 4,000 முதல் 5,000 லோடு கனிம வளங்கள் கடத்தப்படுகின்றன. தி.மு.க., அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது.குறிப்பாக, தி.மு.க.,வினர் அதிக லஞ்சம் வசூலித்துக் கொண்டு, கனிமங்களை விற்றுக் கொண்டிருக்கின்றனர். ஒரு வாரத்துக்குள் அனைத்து அ.தி.மு.க., -எம்.எல்.ஏ.,க்களும் கலெக்டரை சந்திக்க இருக்கிறோம். இரு ஆண்டு கால ஆட்சியில், கோவைக்கு தி.மு.க., எந்த திட்டத்தையும் செய்யவில்லை.எந்தெந்த துறையில் எப்படி பணம் வாங்குகிறார்கள்; ரூ.30 ஆயிரம் கோடி பற்றி நிதியமைச்சர் பேசியது பற்றி, ஊடகங்கள் பெரிதுபடுத்துவதில்லை. 12 மணி நேர வேலை சட்டம் இயற்றியது தவறு; அதை நிறுத்தி வைத்ததை சாதனையாக கூறுகின்றனர். அதை கூட்டணி கட்சியினர் பாராட்டுவது வேதனையாக இருக்கிறது. இவ்வாறு, வேலுமணி கூறினார்.எம்.எல்.ஏ.,க்கள் அம்மன் அர்ச்சுனன், ஜெயராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.