ஆந்திராவில் செம்மரம் கடத்தல்- தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் கைது..!

சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி சிலர் கடத்துவதாக சித்தூர் எஸ்.பி ரிஷாந்த் ரெட்டிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பூத்தலப்பட்டு, குடிப்பாலா ஆகிய காவல் நிலைய போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அதில் 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள 12 செம்மரக்கட்டைகள், நான்கு கார்கள் பறிமுதல் செய்து தமிழகத்தை சேர்ந்த 13 பேர் உள்பட 16 பேரை கைது செய்தனர்.
சித்தூர் மாவட்டத்தில் உள்ள சித்தூர்-பெங்களூரு நெடுஞ்சாலையில் போலீசார் வாகன தணிக்கையின்போது 2 கார்களை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது அதில் செம்மரக்கட்டைகள் கடத்தி வந்தது தெரியவந்தது. கடத்தப்பட்ட 8 செம்மர கட்டைகள் மற்றும் கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தமிழ்நாட்டின் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த 8 பேர், ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் என 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

எஸ்பி உத்தரவின் பேரில் சித்தூர்-கடப்பா நெடுஞ்சாலையில் வாகன சோதனை மேற்கொண்ட குடிபாலா போலீசார் அந்த வழியாக செம்மரங்களை கடத்திச் சென்ற இரண்டு கார்களை கைப்பற்றி அவற்றில் இருந்த நான்கு செம்மரக்கட்டைகளை கைப்பற்றி வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேரை பிடித்து கைது செய்தனர். நான்கு கார்கள், 12 செம்மரக்கட்டைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் 16 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு செம்மரக்கட்டைகளை கடத்தி செல்வது தெரியவந்தது. கைப்பற்றப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு 40 லட்ச ரூபாய் என்று போலீசார் தெரிவித்தனர்.