கோவை மாவட்டத்தில் கடந்த 11 ஆண்டுகளில் யானை மிதித்து 147 பேர் பலி..

கோவை மாவட்டத்தில் கடந்த 11 ஆண்டுகளில் யானை மிதித்து 147 பேர் பலி..யானைகள் வாழ்வியல் மாநாட்டில் தகவல்..
கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் யானைகள் வாழ்வியல் தொடர்பான மாநாடு நடந்தது. இதில் வனத்துறை அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் வனவியல் வல்லுநர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் யானைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது, வழித்தட பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, யானைகள் வரத்தை முன்கூட்டியே கண்டறிந்து பொதுமக்களுக்கு அறிவிப்புகள் வெளியிடுவது, ஊருக்குள் நுழைவதை தடுப்பது, வனவிலங்கு-மனிதர்கள் மோதலுக்கு நிரந்தர தீர்வு காணுவது ஆகியவை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்டன. முன்னதாக கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் யானைகளின் நடமாட்டம், மனிதர்களின் உயிர்ப்பலி ஆகியவை தொடர்பாக காட்ட இலாகா சார்பில் ஒரு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ள விவரங்கள் குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-கோவை வனச்சரகத்தில் மட்டும் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை 11 ஆண்டுகளில் காட்டு யானைகள் மிதித்து 147 பேர் பலியாகி உள்ளனர். அதிலும் குறிப்பாக காட்டுக்குள் சென்ற 45 பேரை யானைகள் மிதித்து கொன்று உள்ளன. கோவை மண்டல வனச்சரகத்துக்கு உட்பட்ட போளுவம்பட்டியில் மட்டும் அதிகபட்சமாக 46 பேர் காட்டு யானைகளுக்கு பலியாகி உள்ளனர். இதேபோல கோவை சரகத்தில் 36 பேர், பெரிய நாயக்கன் பாளையத்தில் 23 பேர், மேட்டுப்பாளையத்தில் 10 பேர், சிறுமுகையில் 14 பேர், காரமடையில் 8 பேர், மதுக்கரையில் 11 பேர் என்று காட்டு யானைக்கு பலியானோர் பட்டியல் நீண்டு வருகிறது.
கேரளாவின் அடர்ந்த வனப்பகுதிகளில் வசிக்கும் காட்டு யானைகள், காலநிலைக்கு ஏற்ப வாழ்விடத்தை மாற்றிக்கொள்ளும் தன்மை படைத்தவை. அதாவது கேரளாவில் கனமழை பெய்தால், அவை தமிழகம்-கர்நாடக வனப்பகுதிக்கு வந்து விடும். அதேபோல தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கினால் யானைகள் மீண்டும் கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள காட்டுப்பகுதிகளுக்கு சென்று விடும். காட்டு யானைகளின் போக்குவரத்தில் வலசைப்பாதை என்பது குறிப்பிடத்தக்கது. இதன்வழியாக மட்டுமே அவை தற்காலிக வாழ்விடங்களை தேடி சென்று மீண்டும் திரும்பும். அவற்றுக்கான வலசைப்பாதையில் மாற்றம் தென்படும்போது யானைகள் ஆக்ரோஷம் அடைகின்றன. எனவே அவை உடனடியாக வலசைப்பாதையை மீட்கும் பணியில் ஈடுபட ஆயத்தப்படுகிறது.
இதன்காரணமாக தான் அங்கு மனித உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அதுவும்த விர இன்றைக்கு காட்டு யானைகளுக்கான வலசை பாதைகளில் பெரும்பா லானவை ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருகின்றன. எனவே அந்த பகுதிகளில் மனித உயிர்ப்பலிகளை தவிர்க்க முடிவது இல்லை. அதுவும்தவிர காட்டு யானைகளின் வசிப்பிடம் தற்போது நாளுக்கு நாள் சுருங்கி கொண்டே வருகிறது. எனவே அவை பல்வேறு வனவிலங்குகளுக்கு மத்தியில் நெருக்கடிகளுடன் வசிக்க நேரிடுகிறது. அப்போது காட்டு யானைகளுக்கு பிற விலங்குகளால் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இதன் காரணமாகவும் அவை வனப்பகுதியில் இருந்து வெளியேறி மனிதர்களின் வசிப்பிட பகுதிகளுக்குள் சென்று விடுகின்றன.நீலகிரி மாவட்டத்தில் இருந்து காட்டு யானைகள் கோவை வனச்சரகம் வழியாக சத்தியமங்கலம் சென்று அதன்பிறகு கேரளாவுக்கு செல்வதை வழக்கமாக கொண்டு உள்ளன. அப்படி அவை செல்லும்போது கோவை வனச்சரகத்தில் வாளையாறு, போளு வாம்பட்டி, ஆனைக்கட்டி, கோபிநாரி, ஹீலிக்கல், ஜாகனாரி, நீலகிரி, சோளக்கரை, சிங்கபதி மற்றும் இருட்டுப்பள்ளம் ஆகிய பகுதிகளில் சில நாட்கள் தங்கியிருந்து இளைப்பாறும். அப்போது அங்கு மனிதர்கள் நுழை யும்போது காட்டு யானைகள் ஆக்ரோஷம் அடைந்து தாக்குதலில் ஈடுபடுகின்றன. இதன் காரணமாக அங்கு உயிர்ப்பலி நேரிடுகிறது. கோவை வனச்சரகத்தில் மட்டும் கடந்த 2022 ஜனவரி முதல் 2023 ஜூன் மாதம் வரை கிட்டத்தட்ட 7566 தடவைகள் காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி உள்ளன. இவ்வாறு யானைகள் வாழ்விட மாநாட்டில் வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.இதுகுறித்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநரும், வன பாதுகாவலருமான ராமசுப்பிரமணியன் கூறியதாவது:- யானைகளின் நடமாட்டத்தை பகல் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் கண்காணிக்க வேண்டியது அவசியம். இதனை கருத்தில் கொண்டு கோவை வனச்சரக பகுதியில் இரவு நேர கண்காணிப்பு பணிகளு க்ககான குழுக்களை ஏற்படுத்தி உள்ளோம். இதன்காரணமாக எங்கள் பகுதியில் காட்டு யானைகள்-மனித மோதலை பெருமளவில் தவிர்த்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்..