ஆலப்புழா: கேரளாவின் குரும்பச்சி பகுதியில் மலை உச்சியில் உள்ள பாறை இடுக்கில் சிக்கி தவித்து வந்த இளைஞர் பத்திரமாக மீட்கப்பட்டார்.
பாலக்காடு மாவட்டம் மலம்புழாவை சேர்ந்த இளைஞர் பாபு என்பவர், அங்குள்ள குரும்பச்சி மலையில் கடந்த திங்கட்கிழமையன்று நண்பர்கள் இருவருடன் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். செங்குத்தான பாறையில் ஏறிய போது கட்டுப்பாட்டை இழந்து சறுக்கிய பாபு, மலை இடுக்கில் இருந்த சிறிய குகை ஒன்றில் சிக்கி கொண்டார். செல்போன் மூலம் பாபு அளித்த தகவலை அடுத்து விரைந்து வந்த பாலக்காடு தீயணைப்புப்படை வீரர்கள் தீவிரமாக முயற்சி செய்தும் நேற்று பாபுவை மீட்க முடியவில்லை.
இதையடுத்து கொச்சி கடற்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு நடைபெற்ற மீட்பு பணியும் தோல்வியில் முடிவடைந்தது. இளைஞர் சிக்கியுள்ள முகடு பகலில் கடும் வெப்பமும், இரவில் கடும் குளிரும் நிலவும் மலை பகுதி என்பதால் மலையேற்ற மீட்பு குழுவினரால் அங்கு செல்ல முடியவில்லை. 2 நாட்களாக தண்ணீர், உணவின்றி தவித்து வந்த இளைஞருக்கு ராணுவத்தின் உதவியுடன் உணவு மற்றும் தண்ணீர் கொடுக்கப்பட்டது. இதையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த உதகமண்டலத்தில் உள்ள வெடிங்டன் படை பிரிவினரும், பெங்களூருவில் இருந்து மலையேற்றம் பயிற்சி பெற்ற ராணுவ வீரர்களும் இளைஞர் பாபுவை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், 43 மணி நேர போராட்டத்திற்கு பின்பு பாபுவை இந்திய ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்டனர். மலையில் கயிறு கட்டி இறக்கி பாபு மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட இளைஞர் சோர்வுடன் இருந்தாலும் நல்ல உடல்நலத்துடனி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இளைஞர் பாபு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Leave a Reply