சென்னை: மணிப்பூர் மாநிலத்தில் இருந்து வேனில் கடத்தி வரப்பட்ட பல கோடி மதிப்புள்ள 11 கிலோ ஆம்பெடமைன் என்ற போதை பொருளை தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக இலங்கையை சேர்ந்த மூவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் இருந்து தமிழகம் வழியாக இலங்கைக்கு பல கோடி மதிப்புள்ள ஆம்பிடமைன் என்ற போதை பொருள் வேனில் கடத்தி வருவதாக சென்னை மண்டலத்தின் தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி நேற்று முன்தினம் தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவினர் சென்னை – கும்மிடிப்பூண்டி தேசிய நெடுஞ்சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த வேனை வழிமறித்து தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை செய்தனர். அதில், இந்தியாவில் தடை செய்யப்பட்ட பல கோடி மதிப்புள்ள 11 கிலோ ஆம்பிடமைன் என்ற போதை பொருள் கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே வேனை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் மணிப்பூர் மாநிலத்தில் இருந்து கடத்தி வந்ததும், இந்த போதை பொருள் ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. அதைதொடர்ந்து போதை பொருள் கடத்தி வந்த டிரைவர் அளித்த தகவலின்படி 3 இலங்கையை சேர்ந்த நபர்கள் உட்பட 5 பேரை கைது செய்தனர். மேலும், 5 பேரும் போதை பொருள் கடத்தலில் கடந்த 7 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதை தொடர்ந்து, 11 கிலோ போதை பொருள், கடத்தலுக்கு பயன்படுத்திய வேன் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கடத்தல் பின்னணியில் சர்வதேச குற்றவாளிகள் இருப்பதால் கைது செய்யப்பட்ட 5 பேர் குறித்த விவரங்களை தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
Leave a Reply