தமிழகத்தில் அதிகரிக்கும் கோடை வெயில் : மக்கள் கவனமாக இருக்க முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்.!

சென்னை: தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் கவனமாகவும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழகத்தின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும், வெப்ப அலையும் ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே, மக்கள் கவனத்துடனும், மிகுந்த எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.

வெப்பத்தில் இருந்து மக்களை பாதுகாப்பது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினேன்.

வெப்பநிலை அதிகமாகும்போது குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகள், வயதானவர்கள், கர்ப்பிணிகள், உடல்நலக் குறைபாடு உடையவர்களை மிக கவனமாக பாதுகாக்க வேண்டும். பணிநேரங்களில் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக அளவில் மோர், அரிசி கஞ்சி, இளநீர், எலுமிச்சை சாறு, ஓஆர்எஸ் கரைசல் போன்றவற்றை பருக வேண்டும். நீர்ச்சத்து காய்கறிகள், பழங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

வெளியில் செல்லும்போதும், திறந்த வெளியில் பணியாற்றும்போதும், தலையில் பருத்தி துணி, துண்டு, தொப்பி அணிய வேண்டும். தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். மிருதுவான, தளர்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது.

மிகவும் சோர்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால் மருத்துவ உதவியை நாடவேண்டும். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், நலவாழ்வு மையங்கள், சமூகநல மையங்கள், மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

நகர்ப்புறங்கள், அதை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் 1,038 இடங்களில் தண்ணீர் பந்தல்களில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பேரூராட்சிகளுக்கு உட்பட்ட 842 இடங்களில் கூடுதல் தண்ணீர் பந்தல் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தண்ணீர் பந்தல்களில் பொதுமக்களுக்கு கூடுதலாக ஓஆர்எஸ் கரைசல் வழங்கப்பட உள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். அதிகாரிகள் முழு அக்கறை செலுத்தி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.