அம்மாடியோ!! என்னா வெயிலு… 13 மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்..!!

தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மக்கள் வெளிய செல்லவே பயப்படுகின்றனர். அந்த அளவிற்கு வெயில் வாட்டி வதைக்கிறது.தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது.

வெயிலின் தாக்கம் குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அதிகபட்சமாக ஈரோட்டில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. இதே போல, திருப்பத்தூர் மற்றும் சேலத்தில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், கரூர் மாவட்டம் பரமத்தியில் 106 பு 7 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும் பதிவாகியுள்ளது. தருமபுரி மற்றும் நாமக்கலில் தலா 105 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்தியது. திருச்சி, திருத்தணி மற்றும் வேலூரில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் வாட்டியது. கோவை மற்றும் மதுரையில் 103 டிகிரியும், பாளையங்கோட்டை மற்றும் தஞ்சையில் 100.4 டிகிரியும் வெப்பம் கொளுத்தியது.

இந்நிலையில் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 106 டிகிரி வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஐந்து நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் கூடுதலாக இருக்கக்கூடும் எனவும் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் ஒருசில இடங்களில் 106 டிகிரி வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது அசவுகரியம் ஏற்படலாம் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், இன்று முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு, திருப்பத்தூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி ஆகிய 24 வட மாவட்டங்களில் இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்.

மற்ற இடங்களில் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வரை, அதாவது 100.4 டிகிரி வரை வெயில் பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 107.6 டிகிரி ஃபரான்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருத்தது. ஈரோட்டை தொடர்ந்து, வேலூரில் 106.88 டிகிரியும், சேலத்தில் 105.98 டிகிரியும் வெயில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்பே 110 டிகிரியை தொடும் அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது.