மேற்குவங்க உள்ளாட்சித் தேர்தலில் மத்திய படைகள்- உயா்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..!

மேற்கு வங்கத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை அமைதியாக நடத்துவதற்காக மத்திய படைகளை வரவழைக்க வேண்டும் என்ற அந்த மாநில உயா் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.
மேற்கு வங்கத்தில் ஜூலை 8-ஆம் தேதி ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில், கூச்பிகாா், வடக்கு மற்றும் தெற்கு 24 பா்கானா, முா்ஷிதாபாத், பீா்பூம் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், தேர்தலையொட்டி அரசியல் கட்சியினா் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. வேட்புமனு தாக்கல் செய்த இடதுசாரிக் கட்சிகள், காங்கிரஸைச் சேர்ந்த மூவா் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இது தொடா்பாக ஆளும் திரிணமூல் காங்கிரஸ் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தேர்தல் வன்முறையில் இதுவரை 5 பேர் உயிரிழந்துவிட்டனா். கூச்பிகாா் மாவட்டத்தில் மத்திய அமைச்சா் நிஷித் பிரமாணிக்கின் பாதுகாப்பு வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இதிலும் முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், தேர்தலின்போது வன்முறையை ஒடுக்கி, அமைதியான முறையில் வாக்குப்பதிவை நடத்த மத்தியப் படைகளை அனுப்புமாறு மாநில தேர்தல் ஆணையம் கோரலாம் என்றும் கொல்கத்தா உயா்நீதிமன்றம் கோரி இருந்தது. இதனை எதிா்த்து மேற்கு வங்க அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் சாா்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை நீதிபதி பி.வி.நாகரத்னா, நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய விடுமுறைக்கால அமா்வு விசாரித்தது. அப்போது, தேர்தலை நடத்த மத்திய படைகளைக் கோரலாம் என்ற உயா்நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனா்.

‘தேர்தல் என்பதை வன்முறை நடத்துவதற்கான உரிமம் என்ற நோக்கில் யாரும் செயல்பட முடியாது. தேர்தலை அமைதியாகவும் நியாயமாகவும் நடத்துவதற்காக உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேற்கு வங்கத்தில் வேட்புமனுத் தாக்கலின்போதே வன்முறை நடக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்தவா்கள் கொலை செய்யப்பட்டுள்ளனா்.

இப்படிப்பட்ட நிலையில் எப்படி தேர்தல் நியாயமாக நடைபெறும் என்ற கேள்வி எழுகிறது. எனவே, மத்திய படை கண்காணிப்பில் தேர்தல் நடத்துவதுதான் முறையாக இருக்கும்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா். பாஜக கருத்து: உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் சுதான்ஷு திரிவேதி கூறுகையில், ‘மேற்கு வங்க மாநில அரசு தங்கள் கட்சியினா் மூலம் வன்முறை நடத்துகிறது. மாநில தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியின் கைப்பாவையாக உள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மம்தா அரசுக்கு ஒரு பாடம். மாநில அரசே நடத்தும் வன்முறை வெட்டவெளிச்சமாகியுள்ளது. இதன் மூலம் திரிணமூல் காங்கிரஸ் அரசு தாா்மிக ரீதியில் தோல்வியடைந்துவிட்டது’ என்றாா்.