கடம்பூர் மலைப்பகுதியில் உலக பழங்குடியினர் தின விழா- பாரம்பரிய நடனமாடி கொண்டாட்டம்..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் ஊராளி மக்கள் சங்கம் மற்றும் பரண் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய உலக பழங்குடியினர் தின விழா சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக கடம்பூர் பஸ் நிலையத்தில் இருந்து பழங்குடி இன மக்கள் 300 க்கும் மேற்பட்டோர் பேரணியாக புறப்பட்டு  பேரணி டான் பாஸ்கோ மையத்தை சென்றடைந்தது. இதை தொடர்ந்து அங்குள்ள மைதானத்தில் ஊராளி பழங்குடியின மக்கள் தங்கள் பாரம்பரிய இசைக்கருவிகளை வாசித்தபடி நடனமாடி மகிழ்ந்தனர். இதைத் தொடர்ந்து ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் முறை குறித்த ஆவணப்படம் வெளியீட்டு விழா நடைபெற்றது. புனித சூசையப்பர் தொழிற்கல்வி நிலையத்தின் இயக்குனர் மரிய ஜோசப் மகாலிங்கம் தலைமையில் ஊராளி மக்கள் சங்கத்தின் தலைவர் மாதேவன், பொருளாளர் ஜார்ஜ், செயலாளர் மாதன் ஆகியோர் முன்னிலையில் ஊராளி பழங்குடியினர் ஆவண படம் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து நீட் தேர்வில் வெற்றி பெற்று சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பிற்கு சேர்ந்துள்ள ஊராளி பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவி காவியாவின் பெற்றோரை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் உலக பழங்குடியினர் தினத்திற்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரண் தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் கென்னடி மற்றும் தொண்டு நிறுவன பணியாளர்கள், ஊராளி மக்கள் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்..