கரும்பு வெட்டுக்கூலி குறைக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்- பேச்சு வார்த்தையில் சுமுக முடிவு..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலை பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் அதிக அளவில் கரும்பு பயிரிட்டுள்ளனர். இந்த கரும்புகள் வெட்டப்பட்டு சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. தற்போது கரும்பு வெட்டு கூலியாக டன் ஒன்றுக்கு  விவசாயிகளிடமிருந்து ரூ.750 ஆலை நிர்வாகம் சார்பில் கரும்பு பணத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் கரும்பு வெட்டுக்கூலி ரூ.480 மட்டுமே பிடித்தம் செய்யப்படுகிறது. எனவே கர்நாடக மாநிலத்தை போல் கரும்பு வெட்டுக் கூலியை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தாளவாடி மலை பகுதியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள்  தாளவாடியில் இருந்து கரும்பு வெட்டி வாரம் ஏற்றி வந்த இரண்டு லாரிகளை தமிழக கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த லாரி உரிமையாளர்கள் மற்றும் போலீசார் உங்களது கோரிக்கைகள் சம்பந்தமாக ஆலை நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் பேசி முடிவு செய்து கொள்ளுங்கள் லாரிகளை தடுத்து நிறுத்தக்கூடாது என கூறினர். இதை அடுத்து தாளவாடி தாசில்தார் ரவிசங்கர், இன்ஸ்பெக்டர் செல்வன், மற்றும் தனியார் சர்க்கரை ஆலை அதிகாரிகள் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சோதனை சாவடி பகுதிக்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கரும்பு விவசாயிகள் தங்களது விவசாயத் தோட்டங்களில் கரும்பு வெட்ட டன் ஒன்றுக்கு கூலி ரூ.750 நிர்ணயித்துள்ள நிலையில் தாளவாடியில் உள்ள தனியார் சக்கரை ஆலை கிளை அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கூடுதலாக கரும்பு வெட்டு கூலியை ஆலை நிர்வாகத்திற்கு தெரியாமல் நிர்ணயத்து வசூலிப்பதாகவும், இதனால் தங்களுக்கு மிகுந்த நஷ்டம் ஏற்படுவதாகவும் அவர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் ஆலை நிர்ணயித்துள்ள வெட்டுக் கூலி மட்டுமே ஆலை தரப்பில் பிடித்தம் செய்யப்படுகிறது எனவே விவசாயிகளிடம் ஊழியர்கள் கூடுதலாக வெட்டு கூலி தர வேண்டும் என கேட்டால் யாரும் தர வேண்டாம். இதுபோன்று நடந்து கொள்ளும் ஊழியர்கள் மீது ஆலை நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்கும் என விவசாயிகளிடம் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் நேற்று மதியம் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து சோதனை சாவடி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று கரும்பு லாரிகள் விடுவிக்கப்பட்டது..