பாஜகவை பற்றி பேச இளங்கோவனுக்கு என்ன தகுதி இருக்கிறது – அண்ணாமலை காட்டம் ..!

திருச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்பொழுது பேசிய அவர் “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும். இடைத்தேர்தல் வேட்பாளர் விவகாரத்தில் எடுத்தோம், கவிழ்த்தோம் என முடிவெடுக்க முடியாது. கூட்டணி தர்மம் மதிக்கப்பட வேண்டும். திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் பலம் வாய்ந்தவராக இருக்க வேண்டும்.

எங்கள் அணியில் குழப்பம் உள்ளது என பேச இளங்கோவனுக்கு தகுதியில்லை. வேட்பாளர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியில்தான் குழப்பம் உள்ளது. திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரை எதிர்கொள்ளும் அளவுக்கு தகுதிவாய்ந்த வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும். ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்பாளராக இருந்தாலும் கூட அவர் பேசிய பேச்சுக்களை தமிழக மக்கள் கண் கூட பார்த்து இருக்கிறார்கள்.

அரசியலுக்காக பாஜகவை குற்றம் சுமத்தலாம். ஆனால் அவர் இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவரே முழுமையாக இளங்கோவன் பின்னால் நிற்பாரா என்பதே சந்தேகமாக உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக அனைத்து ஊடகங்களும் இந்த விவகாரத்தை தான் செய்தியாக வெளியிட்டன. காங்கிரஸ் கட்சியின் நிலை எவ்வாறு இருக்கும் பொழுது ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மற்ற கட்சிகளை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது என்பதே எனது கேள்வி” என அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.