காவல் துறை தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு…

புதுடெல்லி: ராஜஸ்தானில் 3 நாட்களுக்கு நடைபெறும் அனைத்து மாநில காவல் துறை தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து மாநில காவல் துறை தலைவர்கள் (டிஜி) மற்றும் ஐஜிக்கள் மாநாடு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 5-ம் தேதி (இன்று) தொடங்குகிறது. வரும் 7-ம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். இந்த மாநாட்டில் இணையதள குற்றம், காவல் துறையில் தொழில்நுட்பம், தீவிரவாத எதிர்ப்பு சவால்கள், இடதுசாரி தீவிரவாதம், சிறை சீர்திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு உள்நாட்டு பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும். நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவது தொடர்பாகவும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

மேலும், செயற்கை நுண்ணறிவு, டீப்ஃபேக் போன்ற புதிய தொழில்நுட்பங்களால் ஏற்படும் சவால்கள் மற்றும் அவற்றைக் கையாளும் வழிகள் குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.