நாங்களும் வைப்போம் சாலை பாதுகாப்பு பொங்கல்… கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேட்டி..!

கோவை : சாலை பாதுகாப்பு வார விழாவின் 2-வது நாளான இன்று கோவை மாநகரில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை அவினாசி ரோடு லட்சுமி மில் சிக்னலில் தனியார் தொண்டு நிறுவனம் மாநகர போலீசாருடன் இணைந்து சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி நடன அசைவுகளுடன் வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிகள் குறித்தும் பாதுகாப்பான பயணங்கள் குறித்தும் எடுத்துரைத்தார். இதிலு போக்குவரத்து போலீஸ் கமிஷனர் மதிவாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- வருகிற 15- ந் தேதி கோவை மாநகரிலுள்ள ஆட்டோ ஓட்டுநர்கள், வாடகை டாக்சி ஓட்டுநர்கள், சரக்கு வாகன ஓட்டுனர்கள், தனியார் மற்றும் அரசு பஸ் ஓட்டுநர்கள் அனைவருக்கும் கண் மருத்துவமனைகள் மூலம் கண் பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கு அடுத்த நாள் 16-ந் தேதி மாநகரம் முழுவதும் அந்தந்த போலீஸ் நிலையங்களில் சாலை பாதுகாப்பை வலியுறுத்துகின்ற வகையில் மாரத்தான் போட்டி நடத்த திட்டமிட்டுள்ளோம். இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கு பெற உள்ளனர். 17-ந் தேதி பொங்கல் பண்டிகையை சாலை பாதுகாப்பு பொங்கல் பண்டிகையாக கோவை மாநகரில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பொதுமக்கள் வாகன ஓட்டிகளுடன் இணைந்து கொண்டாட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.