நாங்கள் வெளிப்படையானவர்கள்: குற்றம்சாட்டிய சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்-க்கு பதிலளித்த பிரதமர் ட்ரூடோ..!

ந்தோனேசியாவில் G20 மாநாட்டின் நடுவே பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட கனடா மற்றும் சீன தலைவர்களின் உரையாடல்கள் கசிந்துள்ளதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்தோனேசியாவின் பாலியில் G20 உச்சி மாநாடு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன் நடுவே தலைவர்கள் பலர் தனித்தனியாக உத்தியோகப்பூர்வ சந்திப்புகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் சீனத்து ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதன் தகவல்கள் கசிந்தது காரணமாகவே ஜி ஜின்பிங் பிரதமர் ட்ரூடோவை நேரில் சந்தித்து விளக்கம் கேட்டுள்ளார்.

நாம் விவாதித்த அனைத்தும் பத்திரிகைகளில் கசிந்துள்ளது, அது ஏற்புடையதல்ல. உரையாடல் நடத்தப்பட்ட விதம் அது அல்ல என ஜி ஜின்பிங் காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அதற்கு பதிலளித்த ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவில் நாங்கள் வெளிப்படையாக, திறந்த மனதுடன், உண்மையான கலந்துரையாடல்களை முன்னெடுப்போம். அதையே நாங்கள் பின்பற்றியும் வருகிறோம்.

நாம் ஒன்றாக ஆக்கப்பூர்வமாக வேலை செய்ய தொடர்ந்து பார்ப்போம், ஆனால் நாம் உடன்படாத விசயங்களும் அதில் இருக்கும் என ட்ரூடோ அமைதியாக பதிலளித்துள்ளார்.

பிரதமர் ட்ரூடோவின் பதிலைக் கேட்டதும், இருவரும் கை குலுக்கிய பின்னர், நல்லது, ஆனால் அதற்கு முன்னர் நிபந்தனைகளை முடிவு செய்வோம் என ஜி ஜின்பிங் குறிப்பிட, வெவ்வேறு திசைகளில் இரு தலைவர்களும் நடந்து சென்றுள்ளனர்.

சீனத்து ஜனாதிபதியிடம், கனேடிய தேர்தலில் சீனாவின் தலையீடு, உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர், வடகொரியா, காலநிலை மாற்றம் உள்ளிட்ட விசயங்களை பிரதமர் ட்ரூடோ விவாதித்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, ஜஸ்டின் ட்ரூடோ உடனான விவாதத்தின் நடுவே, பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் உடனான பேச்சு வார்த்தைக்கு நேரம் ஒதுக்கப்பட்டு, பின்னர் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.