ஈரானிய கப்பல்கள் சிறைபிடிப்பு

மெரிக்கா முன்மொழிந்த போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஈரான் என்ன பதில் சொல்லப்போகிறது என்று உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், அமெரிக்கக் கடற்படையின் ஒரு நடவடிக்கை அமைதிக்கான நம்பிக்கையைக் குறைத்துள்ளது.

ஈரானியக் கொடி ஏந்திய இரண்டு காலியான எண்ணெய் கப்பல்களை அமெரிக்க ராணுவம் வழிமறித்துத் தடுத்து நிறுத்தியுள்ளது. அமெரிக்கா விதித்துள்ள தடையை மீறி இந்தக் கப்பல்கள் செல்ல முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முன்னதாக, ஈரானிய ராணுவம் அமெரிக்கப் போர்க்கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்திய வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.மத்திய கிழக்குப் பகுதியில் கடல்சார் பாதுகாப்பும், அரசியல் பதற்றமும் இந்தச் சம்பவத்தால் மீண்டும் அதிகரித்துள்ளது. விதிகளை மீறுவதைத் தடுக்க இதுவரை பல வணிகக் கப்பல்களைத் தடுத்து நிறுத்தியுள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்ட கப்பல்களின் பாதையை மாற்றியுள்ளதாகவும் அமெரிக்கத் தரப்பு தெரிவித்துள்ளது.ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தாலும், மறுபுறம் கடலில் இரு நாடுகளுக்கும் இடையே நடக்கும் இந்த மோதல்கள் போர் பதற்றத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளன. இந்தச் சூழல் உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.