வடிவேலுவின் கிணற்றை காணோம் காமெடியை போல… 5000 ஆண்டுகள் பழமையான கோவிலை காணவில்லை என புகார்..!

கோவை:
அகில இந்திய தமிழ்நாடு மள்ளர் எழுச்சி பேரவையினர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
திருச்சி மாவட்டம் குணசீலம் கிராமத்தில் ஞானவர்மன் என்கின்ற சோழ மன்னரால் கட்டப்பட்ட 5000 ஆண்டுகள் பழமையான கற்கோவிலான பிரசன்னா வெங்கடாஜலபதி கோவில் மற்றும் தேவேந்திரன் சிலை மாயமாகி உள்ளது. கடந்த மாதம் 29-ந் தேதி கோவிலுக்கு சென்று வழிபாடி நடத்தி வரலாற்று புராதான சின்னங்களை கண்டு வர சென்ற போது சோழ மன்னரால் கட்டப்பட்ட முழு கற் கோவிலும் சுத்தமாக இடித்து, புதிய கோவில் கட்டப்பட்டுள்ளது. மேலும், அந்த புதிய கோவில் கருவறையில் கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஜுவல்லரி பெயருடன் கூடிய புதிய கல்வெட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தோம். இந்தியாவின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் போற்றி பெருமையுடன் நிற்கும் கோவில்கள் மற்றும் புராதான சின்னங்கள் பழமை மாறாமல் பாதுகாக்க வேண்டும் என்று இந்திய சட்டம் கூறியுள்ளது. அதன்படி நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான புராதன சின்னங்கள் மற்றும் ஓவியங்கள் கோவில்கள் இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும் அல்லது தனியாரின் கட்டுப்பாட்டில் இந்து சமய அறநிலையத்துறை மேற்பார்வையில் இருந்தாலும் பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் . அப்படி புதுப்பிக்கும் போது அவைகளை ஆவணம் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் எந்தவித அரசின் சட்ட வரைமுறைகளை பின்பற்றாமல் ஒரு கோவிலையே முழுவதுமாக இடித்து. சிலையை கடத்தி இருப்பது மிகப்பெரும் அதிர்ச்சியூட்டும் சம்பவமாக இருக்கிறது. எனவே 5000 ஆண்டுகள் பழமையான கோவில் மற்றும் தேவேந்திரன் சிலையை மீட்டுக் கொடுக்க வேண்டும். அது மட்டும் இன்றி தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலை துறையின் கீழ் உள்ள கோவில்களில் உள்ள புராதான சின்னங்கள் முறையாக பாதுகாக்கப்படுகிறதா என்று குழு அமைத்து விசாரிக்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.