மூன்று வருடங்களாக மூக்கில் மூச்சு விட முடியாமல் சிரமப்படும் இளம்பெண்- கோவை கலெக்டரிடம் மனு..!

கோவை சவுரிபாளையம் அண்ணா நகரை சேர்ந்த சோபியா என்பவர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனக்கு தைராய்டு அறுவை சிகிச்சை செய்வதற்காக கோவை இ. எஸ்.ஐ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டேன். பின்னர் எனக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அறுவை சிகிச்சை செய்த அன்று எனக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. டாக்டர்கள் எனக்கு மூச்சு விட வேண்டி கழுத்தில் ஒரு குழாய் அமைத்தனர். அதன் பின்னர் என்னால் மூக்கு வழியாக சுவாசிக்க முடியவில்லை. இது பற்றி டாக்டர்களிடம் கேட்டபோது மூச்சு குழாயில் உள்ள நரம்பு அறுந்து விட்டது 3 மாதத்தில் சரியாகிவிடும் என்று கூறினர். ஆனால் என்னால் கழுத்தில் குழாய் அமைத்ததால் பேச முடியவில்லை. கடந்த 3 வருடங்களாக இதனால மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன். எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் கூலி வேலை செய்து வருகிறார். கழுத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனையால் என்னால் வேலைக்கு செல்ல முடியாமல் குடும்பம் நடத்த கஷ்டப்பட்டு வருகிறேன். எனவே கலெக்டர் தக்க நடவடிக்கை எடுத்து எனக்கு மருத்துவ உதவியை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.