தமிழர்கள் குறித்து மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு – ஸ்டாலின், இ.பி.எஸ்., உதயநிதி கடும் கண்டனம்.!!

சென்னை: கர்நாடகாவில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ஷோபாபா, ‘தமிழகத்தை சேர்ந்தவர்கள் வந்து, எங்கள் கர்நாடகா ஹோட்டலில், வெடிகுண்டுகளை வைக்கின்றனர். எங்கள் மாநிலம் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அவர்கள் மீது கர்நாடக மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இன்னும் சிலர் வேறு இடங்களில் இருந்து வந்து, ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கோஷம் போடுகின்றனர். அவர்களை தடுப்பது இல்லை’ என, சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசினார். அவரது பேச்சுக்கு, தமிழக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.முதல்வர் ஸ்டாலின்: மத்திய அமைச்சர் ஷோபாபாவின் பொறுப்பற்ற பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன்.
இதை கூறுபவர், தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரியாக இருக்க வேண்டும் அல்லது ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்புடன் நெருக்கமான தொடர்புடையவராக இருக்க வேண்டும். இத்தகைய கூற்றை கூற, அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை.பா.ஜ.,வின் பிளவுபடுத்தும் பேச்சை, தமிழர்களும், கன்னடர்களும் புறக்கணிப்பர். அமைதி, நல்லிணக்கம் மற்றும் தேச ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய ஷோபாபா மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.பிரதமர் முதல் தொண்டர்கள் வரை, பா.ஜ.,வில் உள்ள அனைவரும் இத்தகைய பிரிவினைவாத அரசியலில் ஈடுபடுவதை, உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த வெறுப்பு பேச்சை, தேர்தல் கமிஷன் கவனத்தில் வைத்து, உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: தமிழக மக்களை பொதுப்படையாக பயங்கரவாதிகள் போல சித்தரிக்கும், பா.ஜ.,வை சேர்ந்த மத்திய அமைச்சர் ஷோபாபாவின் வெறுப்பு பேச்சுக்கு என்னுடைய கடும் கண்டனம்.இதுபோன்ற பிரிவினைவாத பேச்சுகளை, இனியும் யாரும் பேசாத வகையில், தேரத்ல் கமிஷன் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

உதயநிதி ஸ்டாலின்: ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு தொடர்பாக, மத்திய அமைச்சர் ஷோபாவின் விஷமத்தனமான அறிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த வழக்கை என்.ஐ.ஏ., விசாரித்து வரும் நிலையில், பா.ஜ., அமைச்சர் அபத்தமான கருத்தை தெரிவித்துள்ளார். என்.ஐ.ஏ., இவரையும் விசாரிக்க வேண்டும். அவரது இந்த வெறுப்புப் பேச்சுக்காக, அவர் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.