இனியும் மோடி ஆட்சி தொடர்வது நாட்டுக்கு நல்லதல்ல – முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்.!!

நாட்டின் மீது கொண்ட அக்கறையால் பாஜக ஆட்சியை அகற்ற இந்தியா முழுவதும் இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் அறிக்கை என அனைத்து கட்சிகளும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

இப்படியான நிலையில் திமுக தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர் அறிவிப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். தொடர்ந்து மேடையில் பேசிய அவர், ‘தேர்தலுக்கு முன்பாக ஒரு அறிக்கை தயாரித்து பொறுப்புக்கு வந்த பிறகு அதை முழுமையாக நிறைவேற்றி காட்டுவது தான் திமுக. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தயாரிக்க முடிவு செய்து கனிமொழி எம்.பி., தலைமையிலான குழு அமைக்கப்பட்டது.

இது திராவிட முன்னேற்ற கழக தேர்தல் அறிக்கை மட்டுமல்ல, தமிழ்நாடு மக்களின் தேர்தல் அறிக்கையாகும். 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாசிச பாஜக இந்தியாவை எல்லா வகையிலும் மிக மோசமாக பாழ்படுத்தி விட்டது. கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு நிறைவேற்றவில்லை. இந்தியாவின் கட்டமைப்பை சிதைத்து விட்டார்கள். கையில் கிடைத்த அதிகாரத்தை வீணடித்து விட்டார்கள் என்பது தான் உண்மை. இனியும் மோடி ஆட்சி தொடர்வது நாட்டுக்கு நல்லதல்ல. நாட்டின் மீது கொண்ட அக்கறையால் பாஜக ஆட்சியை அகற்ற இந்தியா முழுவதும் இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் மூலம் இந்தியாவில் அமையக்கூடிய புதிய ஆட்சியானது இந்தியாவினுடைய கூட்டணி ஆட்சித்தன்மையை மதிக்கக்கூடியதாகவும், மாநில நலனை அரவணைத்து செயல்பட கூடியதாக அமைய வேண்டும். சமத்துவம், சமதர்மம் எண்ணம் கொண்ட ஆட்சியாக அமைய வேண்டும்’ என தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து 21 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலையும் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.