ரவீந்திரநாத் எம்பி வெற்றி ரத்து – உச்சநீதிமன்றத்தில் திமுகவின் தங்க தமிழ்ச்செல்வன் கேவியட் மனு..!

தேனி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓ.பி.ரவீந்திரநாத்தின் தேர்தலை வெற்றியை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு விவகாரத்தில், தி.மு.க.வின் தங்க தமிழ்ச்செல்வன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை பொதுத்தேர்தலில், தேனி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் போட்டியிட்டு 76 ஆயிரத்து 319 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றிப் பெற்றார். இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி அந்த தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அதில், ஓட்டுக்காக வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து ரவீந்திரநாத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாகவும், பணம் பட்டுவாடா அதிகம் நடப்பதாக வேலூர் தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தேனி தொகுதியிலும் அதிக பணப்பட்டுவாடா நடந்தும், தேர்தலை தள்ளிவைக்கவில்லை என்று கூறியிருந்தார். ஆனால் இந்த தேர்தல் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால், அந்த வழக்கை ஏற்கக்கூடாது என ரவீந்திரநாத் நிராகரிப்பு மனுவை தாக்கல் செய்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், ரவீந்திரநாத்தின் மனுவை தள்ளுபடி செய்தது.

அதனை தொடர்ந்து நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு விசாரணை நடைபெற்றபோது, மூன்று நாட்கள் நேரில் ஆஜரான ரவீந்திரநாத் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து சாட்சியம் அளித்தார். அவரை தொடர்ந்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். அதன் பின்னர் இரு தரப்பிலும் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதங்களை முன்வைத்து வந்தனர். அனைத்து வாதங்கள் நிறைவடைந்த நிலையில் வழக்கின் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், வழக்கு தொடர்பாக சில விளக்கங்களை நீதிபதி கேட்டிருந்தார். அது தொடர்பாக ஆவணங்களை சமர்பிக்க தயாராக இருப்பதாக ரவீந்திரநாத் குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு, தன் தரப்பு விளக்கத்தை கேட்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

அதை நீதிபதி ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில், ரவீந்திரநாத் கடந்த வாரம் நேரில் ஆஜராகி கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்தார். அப்போது அவர் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் கேட்ட கேள்விகளுக்கு, சாட்சி கூண்டில் ஏறி ஆங்கிலம் மற்றும் தமிழில் தனது வாக்குமூலத்தை அளித்தார். பின்னர் மனுதாரர் மிலானி தரப்பு வழக்கறிஞர் வி.அருண் நடத்திய குறுக்கு விசாரணைக்கும் பதிலளித்தார். மேலும் அதிகார துஷ்பிரயோகம், ஆவணங்களில் திருத்தம், சொத்துகள் முறையாக காட்டாதது, பணப்பரிமாற்றம் போன்ற குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை மறுத்து மூன்றரை மணி நேரத்திற்கு மேலாக நின்றபடியே விளக்கம் அளித்தார். இதையடுத்து கடந்த ஜூன் 28-ஆம் தேதி இரு தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களுக்கு பிறகு வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் கடந்த ஜூலை 6-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், ஓ.பி.ஆர் வேட்புமனுவில் சொத்துகளின் விவரம், வங்கி கடன், வைப்பு தொகை மூலமாக பெற்ற வட்டி விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. ஆதலால் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி ஏற்றது செல்லாது என உத்தரவிட்டார். அதோடு, ஓ.பி.ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது எனவும் தீர்ப்பளித்தார். அப்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக தீர்ப்பை நிறுத்தி வைக்குமாறு ஓ.பி.ரவிந்திரநாத் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி 30 நாட்கள் தீர்ப்பை நிறுத்திவைத்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஒபி ரவீந்திரநாத் மேல்முறையீடு செய்ய உள்ள நிலையில், தனது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என திமுகவை சேர்ந்த தங்க தமிழ்செல்வன் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்..