தாளவாடி மலைப்பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இருவர் காயம்..

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தொட்டபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தொட்டமாதன். இவரது தோட்டத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார். வனப் பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் இரவு நேரத்தில் விவசாய தோட்டங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.  பயிர்களை பாதுகாப்பதற்காக அப்பகுதி விவசாயிகள் இரவு நேரத்தில் விவசாயிகளின் நிலத்தில் இரவு முழுவதும் கண்விழித்து பயிருக்கு காவல் இருப்பது வழக்கம். விவசாயி தொட்டமாதனுக்கு உடல்நிலை சரியில்லாததால் நேற்றுமுன்தினம் இரவு அவரது மகன்கள் சிவு(16) மற்றும் மாதேஷ்(19) இருவரும் விவசாய தோட்டத்தில் உள்ள மக்காச்சோள பயிருக்கு அப்பகுதியில் உள்ள குடிசையில் தங்கி காவல் பணி மேற்கொண்டனர்.  அதிகாலை மக்காச்சோள பயிருக்குள் காட்டு யானை நுழைந்து சேதப்படுத்துவதைக் கண்ட சிவு மற்றும் மாதேஷ் இருவரும் சேர்ந்து சத்தம் போட்டு யானையை விரட்ட முயற்சித்தனர். அப்போது காட்டு யானை இருவரையும் துரத்தி தாக்கியதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இருவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்து விவசாயிகள் அப்பகுதிக்கு வந்து பட்டாசுகளை வெடித்து காட்டு யானை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். இதைத் தொடர்ந்து யானை தாக்கி காயமடைந்த இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தாளவாடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சாம்ராஜ்நகர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து தலமலை வனத்துறையினர் மற்றும் ஆசனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..