கோவை கடைகளில் ஐஎஸ்ஐ தர சான்றிதழ் இல்லாத பொம்மைகள் பறிமுதல்..!!

கோவை கடைகளில் விற்பனை செய்யப்பட்ட ஐஎஸ்ஐ தரமுத்திரை இல்லாத பொம்மைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக இந்திய தர நிர்ணய அமைவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கோவை தர நிர்ணய அமைவனம் கூறியிருப்பதாவது:
கோவையில் உள்ள இந்திய தர நிர்ணய அமைவன இணை இயக்குநர்கள் எஸ்.நாகவல்லி, ஜீவானந்தம், உதவி இயக்குநர் கே.கவின் ஆகியோர் கோவையில் உள்ள இரு பொம்மை விற்பனைக் கடைகளில் அதிரடி சோதனை செய்தனர். அப்போது அந்தக் கடைகளில் ஐஎஸ்ஐ தர முத்திரை இல்லாமல் பொம்மைகள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கடைகள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளனர். எனவே பொதுமக்கள், விநியோகஸ்தர்கள், உற்பத்தியாளர்கள் தர முத்திரை இல்லாத பொருள்களை வாங்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குக்கர், அடுப்புகள், சிமென்ட், இரும்புக் கம்பி, மின்சார கேபிள்கள் போன்றவற்றில் தர முத்திரை தவறாக பயன்படுத்தப்படுவது பற்றி தெரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..