அரசின் புகைப்படக் கண்காட்சி : கோவை வ.உ.சி மைதானத்தில் நாளை முதல் நடக்கிறது..!

கோவை: ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழனின் கனவுகளைத் தாங்கி’ என்ற தலைப்பில் கோவை வ.உ.சி. மைதானத்தில் அரசின் புகைப்படக் கண்காட்சி ஜனவரி 13 முதல் 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை, வ.உ.சி. மைதானத்தில் அரசின் துறைகளை ஒருங்கிணைத்து ‘ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழரின் கவுனகளைத் தாங்கி’ என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் ஜனவரி 13 முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் இதனை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வரை பொதுமக்கள் பார்வையிடலாம்.
இப்புகைப்படக் கண்காட்சியில் முதல்வர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள், மக்களைத் தேடி மருத்துவ திட்டம், இன்னுயிர் காப்போம் திட்டம், காலை உணவு திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம், நான் முதல்வன், கல்லூரி கனவு, புதுமைப் பெண் திட்டம், நம்ம ஊரு சூப்பரு, மீண்டும் மஞ்சப்பை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் இடம்பெறவுள்ளன. புகைப்படக் கண்காட்சி நடைபெறும் நாள்களில் பள்ளிக் கல்வி, உயர்கல்வித் துறை சார்பில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும், கலைபண்பாட்டுத் துறை மற்றும் சுற்றுலாத் துறை சாா்பில் ஒயிலாட்டம், தப்பாட்டம், கிராமிய நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
மகளிர் திட்டம், உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் சாலையோர உணவகம் போன்ற அமைப்பில் சிறுதானியம் மற்றும் பல்சுவை உணவுடன் கூடிய அரங்குகள் அமைக்கப்படுகிறது. மகளிா் சுய உதவிக்குழு மூலம் சமத்துவ பொங்கல் விழாவும் நடைபெறவுள்ளது. எனவே, இப்புகைப்படக் கண்காட்சி, கலைநிகழ்ச்சிகளை பொதுமக்கள் பார்வையிட்டு பயன்பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.