நீலகிரியில் 3-வது நாளாக கொட்டிய உறைபனி- ஜில்லென்று மாறிய வானிலை..!

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் டிசம்பா், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படும். தற்போது ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் உறைபனி கொட்டி வருவதால் புல்வெளிகள் பனி போா்த்திய நிலையில் வெண்மையாக காட்சியளிக்கின்றன. புற்கள் மற்றும் வாகனங்களில் வெண்மையாக படா்ந்துள்ள உறைபனியை சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடன் கண்டு ரசித்துச் செல்கின்றனா். கடும் உறைபனி பொழிவு காரணமாக ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழக்கத்தைவிட கடும் குளிா் நிலவி வருகிறது. குளிரையும் பொருட்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகள் இந்த தட்பவெப்ப நிலையைக் அனுபவித்து செல்கிறார்கள். இன்று 3-வது நாளாக நீலகிரியில் உறைபனி காணப்பட்டது. ஊட்டி தாவரவியல் பூங்கா உள்ளிட்ட நகர் பகுதியில் இன்று காலை 3.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது. புறநகர் பகுதிகளிலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளான அவலாஞ்சி, அப்பர் பவானி போன்ற பகுதிகளிலும் உறைபனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. தொடர்ந்து உறைபனி கொட்டுவதால் நீலகிரி மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.