வட இந்தியர்களுக்கு அடிமையாகி விட கூடாது மகள் எழுதிய கவிதையுடன் தொழிலாளி கலெக்டரிடம் மனு

கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதனால் அலுவலக வாசல் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நின்றிருந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வருபவர்களின் உடைமைகளை சோதனை செய்து அனுப்பி வைத்தனர். புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி மக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.

தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை ஈரோடு, திருப்பூர், மதுரை என பெரு நகரங்களில் வடமாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் வேலை பார்த்து வருகின்றனர். சமீபத்தில் திருப்பூரில் வட மாநில தொழிலாளர்கள் தமிழக வாலிபரை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர்களை விட வட மாநில தொழிலாளிகள் குறைந்த சம்பளத்திற்கு வேலை பார்ப்பதனால் பெரும்பாலான முதலாளிகளால் வட மாநிலத்தவரை பணியில் அமர்த்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் வட மாநிலத்தவரின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என கோவை வடவள்ளி பகுதியைச் சார்ந்த பாலமுருகன் என்ற கட்டிட தொழிலாளி கலெக்டரிடம் மனு அளித்தார். அப்போது அவர் கூறுகையில், வடமாநில தொழிலாளர்களால் பல தமிழக இளைஞர்கள் வேலையின்றி தவிக்கின்றனர். குறிப்பாக கட்டிடத் தொழிலில் வட மாநில தொழிலாளிகளின் ஆதிக்கம் அதிகரித்து தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டிருக்கிறது. அவர்களின் ஆதிக்கம் தமிழ்நாட்டுக்கு பேராபத்து. என்றார். இதனைத் தொடர்ந்து அவர் கலெக்டரிடம் தனது மகள் எழுதிய கவிதையுடன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பேனா, பென்சில்க்கு சண்டையிடும் அரசியல்வாதிகளுக்கும், விஜயா அஜித்தா என சண்டையிடும் ரசிகர் பெருமக்களுக்கும் ஒரு முக்கியமான வேண்டுகோள். அழிந்து வரும் தமிழகத்தையும், எனது தமிழ் மண்ணையும் மீட்டெடுப்போம் . வட இந்தியர்களிடமிருந்து என்னை போன்றவர்களையும், நமது வருங்காலத்தையும் போற்றி பாதுகாப்போம், போராடுவோம் தமிழகத்தை மீட்கும் வரை . இப்படிக்கு தமிழனின் ஒருவர் தமிழ் மதி. என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்து மக்கள் கட்சி தமிழகத்தினர் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது கோவை கோனியம்மன் கோவில் மாசி தேர் திருவிழா பிப்ரவரி 21-ந் தேதியிலிருந்து மார்ச் 7-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். முக்கிய நிகழ்வான தேர் திருவிழா புதன்கிழமை வருகிறது. எனவே அன்று மக்கள் பாதிக்காத வகையில் பள்ளி, கல்லூரிக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும். சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி பகுதியில் 70 ஆண்டுகளுக்கு பழமையான திருமண மண்டபம் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் சிதிலமடைந்து உள்ளது. அதனை புதிதாக அதே இடத்தில் அமைத்து தர வேண்டும். மேலும் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள மேம்பால பணிகளை உடனடியாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கோவை வடக்கு தொகுதி மக்கள் நீதி மைய கட்சியினர் கலெக்டர் கிராந்தி குமார் பாடி-யிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவை கணபதிபுதூர் பகுதி வார்டு எண் 31-ல் உள்ள செக்கான் தோட்டம் மற்றும் பாலன் நகர் பகுதியில் ரயில்வே பாலம் உள்ளது. இது பயன்பாட்டிற்கு வராததால் அந்த பகுதியில் வசிக்கும் நூற்றுக்கணக்கானோர் வேலைக்கு செல்லும்போது சில கி.மீ. சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் பலர் ஆபத்தை உணராமல் ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்கிறார்கள். இதனால் விபத்து ஏற்பட்டு உயிர் பலி ஏற்படுகிறது. இதனால் பெண்கள் முதியவர்கள் பள்ளி குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே அந்த பாலப்பணிகளை விரைவு படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.