திடீர் வேகமெடுக்கும் கொரோனா… இந்தியாவில் விரைவில் 4ஆம் அலை..? தமிழகத்திலும் இரட்டிப்பான பாதிப்பு… டாப் மருத்துவர்கள் சொல்லும் காரணம் இது தான்..!!

டெல்லி: நாட்டில் பல இடங்களில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், இது குறித்து டாப் மருத்துவர்கள் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் ஓமிக்ரான் கொரோனா காரணமாக 3ஆம் அலை ஏற்பட்டது. ஓமிக்ரான் லேசான பாதிப்பையே ஏற்படுத்தியதால், டெல்டாவை போல உயிரிழப்புகள் அதிகமாகப் பதிவாகவில்லை.

மேலும், ஓமிக்ரான் கொரோனா ஒரு சில வாரங்களிலேயே முழுமையாகக் கட்டுக்குள் வந்துவிட்டது. அதன் பின்னர் வைரஸ் பாதிப்பு நாட்டில் தொடர்ந்து குறைந்தே வந்தது.

இதன் காரணமாக விதிக்கப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகளை பல்வேறு நாடுகளும் விலகத் தொடங்கினர். குறிப்பாக மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் மாஸ்க் அணிவது போன்ற கட்டுப்பாடுகளில் கூட தளர்வுகளை அறிவித்தன. இந்தச் சூழலில் நாட்டில் வைரஸ் பாதிப்பு மீண்டும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கி உள்ளது அடுத்த அலை குறித்து மக்களிடையே சிறிது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஓமிக்ரான் வேரியண்டகள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவது, வேக்சினை தாண்டி ஏற்படும் லேசான பாதிப்பு உள்ளிட்டவை நாட்டில் சில இடங்களில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கக் காரணமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். நாட்டில் பல மாதங்களுக்குப் பின்னர் வைரஸ் பாதிப்பு சமீபத்தில் தான் 10 ஆயிரத்தைக் கடந்து இருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் 11, 739 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வரும் காலத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. கர்நாடகாவிலும் வைரஸ் பாதிப்பு மெல்ல அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 5,218 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அங்கு முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது தினசரி கேஸ்கள் 60 சதவீதம் அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று மட்டும் ஒரே நாளில் மட்டும் 1,382 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாகச் சென்னையில் 607 பேர், செங்கல்பட்டில் 240 பேர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உயிரிழப்புகள் இல்லை என்பது சற்றே ஆறுதலான ஒரு விஷயமாகும். இது தவிரக் கேரளா, உத்தர்ப பிரதேசம், தெலங்கானா, ஹரியானா, மேற்கு வங்கம், குஜராத் போன்ற மாநிலங்களிலும் வைரஸ் பாதிப்பு அதிகத்து வருகிறது.

வைரஸ் பாதிப்பு அதிகரிப்பது குறித்து டாக்டர் அக்ஷய் புத்ராஜா கூறுகையில், “ஒமிக்ரான் மற்றும் அதன் வேரியண்ட்களால் கேஸ்கள் அதிகரித்து வருகின்றன. ஏனெனில் இங்குப் பல துணை வேரியண்ட்கள் உள்ளன. BA.2 கொரோனா தான் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும், BA.4 மற்றும் BA5 கொரோனாவும் சில இடங்களில் பரவ தொடங்கி உள்ளது. வேக்சின் போட்டவர்களிலும் சிலருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வேக்சின் போட்டவர்களுக்கும் லேசான பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது” என்றார்.

இது குறித்து டாக்டர் அக்ஷய் புத்ராஜா கூறுகையில், “இது நான்காவது அலை அல்ல.. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இப்போது கொரோனா ஸ்பைக்குகள் மட்டுமே ஏற்பட்டு உள்ளது. புதிய ஆபத்தான வேரியண்ட்கள் இருந்தால் மட்டுமே 4ஆவது அலை ஏற்படும். துணை வேரியண்டகளால் வைரஸ் புதிய அலை ஏற்படாது” என்றார்.