ரயில் பயணிகளின் கவனத்திற்கு.. இதற்கெல்லாம் அனுமதி கிடையாது… புதிய விதிகளை அமல்படுத்திய இந்திய ரயில்வே..!

பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்த புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் ரயில் பெட்டிகளில் புகைபிடிப்பது, மது அருந்துவது போன்ற எந்தவொரு செயலையும் செய்யக்கூடாது என்று ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இரவு நேரங்களில், 10 மணிக்கு மேல் எந்த ஒரு பயணியும் தங்களது போனில் சத்தமாகப் பேசக் கூடாது. அதிக சத்தத்துடன் பாட்டு கேட்கக் கூடாது. தேவையென்றால் ஹெட்-போன் போட்டுக் கொண்டு பாட்டுக் கேட்கலாம். 10 மணிக்கு மேல் மின் விளக்குகளை அணைத்துவிட வேண்டும். இரவு நேர விளக்கு மட்டும் பயன்படுத்தலாம். இரவு 10 மணிக்கு மேல் டிக்கெட் பரிசோதகர், டிக்கெட்களை சரிபார்க்கப் பயணிகளைத் தொந்தரவு செய்யக் கூடாது. 10 மணிக்கு மேல் பயணிகள் சத்தமாக பேசிக்கொண்டு செல்லக் கூடாது. நடு படுக்கை இருக்கையில் உள்ள பயணிகள் 10 மணிக்கு மேல் படுக்க வேண்டும் என்றால் அதற்குக் கீழ் இருக்கை பயணிகள் மறுப்பு தெரிவிக்கக் கூடாது.

இரவு 10 மணிக்கு மேல் ஆன்லைன் உணவு டெலிவரி கிடையாது. ஆனால் காலை உணவை இரவே ஆர்டர் செய்யலாம். புகைப்பிடித்தல், மது அருந்துவது, எளிதில் பற்றக்கூடிய பொருட்களை ரயிலில் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகளை மீறுவதைக் கண்டறிந்தால், பயணிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் பரிசோதகர், கேட்டரிங் ஊழியர்கள் மற்றும் பிற ரயில்வே பணியாளர்கள் ஆகியோரும் பயணிகளுக்கு எந்த அசவுகரியமும் ஏற்படுத்தாமல் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் பயணிகள் ஏற்படும் பிரச்சனைகளுக்குத் தீர்வு வழங்க வழிநடத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.