திருவள்ளுவர் தினம்: இறைச்சி விற்பனைக்கு தடை..!

கோவை: திருவள்ளுவர் தினமான ஜனவரி 16 ஆம் தேதி இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிா்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாநகராட்சி ஆணையர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளுவர் தினம் வருகிற ஜனவரி 16ஆம் தேதி (திங்கள்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தமிழக அரசால் ஆடு, மாடு, கோழிகளை வதை செய்வது, இறைச்சி விற்பது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சிக் கடைகளை ஜனவரி 16 ஆம் தேதி திறக்கக்கூடாது. அன்றைய தினம், மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டு வரும் உக்கடம், சத்தி சாலை, போத்தனூர் அறுவை மனைகள் மற்றும் துடியலூர் மாநகராட்சி இறைச்சிக் கடைகள் செயல்படாது. இந்த உத்தரவை மீறி திருவள்ளுவர் தினத்தில் இறைச்சி விற்பனை செய்தால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.