இது என் ஏரியா… கிராமத்திற்குள் ஒய்யாரமாக நடந்து செல்லும் பாகுபலி – இணையத்தில் வைரலாகும் வீடியோ.!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சமயபுரம், ஓடந்துரை, குரும்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானை பாகுபலி அவ்வப்போது வந்து செல்ல கூடிய நிகழ்வாக மாறிப்போனது.

மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் இந்த காட்டுயானை அருகில் உள்ள விவசாய நிலங்கள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி செல்வதால் விவசாயிகள் இந்த யானையை அடர் வனத்தினுள் விரட்ட வலியுறுத்தி வருகின்றனர்.

இருப்பினும் யானை பாகுபலி வனத்துறையினரை என்னதான் விரட்டினாலும் இது என் ஏரியா என்ற நினைப்புடன் தொடர்ந்து தான் வந்து செல்லும் பாதையாகவே சமயபுரம் சாலையை பயன்படுத்தி வருகிறது.

நெல்லிமலை வனப்பகுதிக்கும் கல்லார் வனப்பகுதிக்கும் இடையே செல்ல இந்த சமயபுரம் கிராம சாலை வழியாக வருவதை காட்டுயானை வழக்கமாக கொண்டுள்ளது .

இருப்பினும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடமாடி வந்தாலும் இதுவரை இந்த காட்டுயானை பாகுபலி மனிதர்களை தாக்கியதில்லை. மேலும் நேற்று இரவு நெல்லிமலையில் இருந்து சமயபுரம் வழியாக பவானி ஆற்றில் தண்ணீர் குடிக்க சென்ற காட்டு யானை பாகுபலி இன்று அதிகாலையில் சமயபுரம் வழியாக மீண்டும் நெல்லி மலைக்கு சென்றது. பொதுமக்கள் அதிகாலையில் செல்வதை கண்டு அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் விரைவில் இந்த காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.