கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணி மும்முரம்..!

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் வெடிப்பு நிகழ்ந்தது. இதில் காரில் இருந்த ஜமேஷா முபின் உயிரிழந்தான். போலீசாரின் விசாரணையில், ஜமேஷா முபின் கோவையில் மிகப்பெரிய நாசவேலைக்கு திட்டமிட்டதும், அதில் சிக்கி அவரே இறந்ததும் தெரியவந்தது. மேலும் இதுபோன்று கோவையில் பல இடங்களில் நாசவேலையை அரங்கேற்ற திட்டமிட்ட தகவலும் தெரியவந்தது. இதற்கிடையே இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் இந்த வழக்கில் முகமது அசாருதீன், அப்சர்கான் உள்பட 11 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி பல்வேறு தகவல்களை சேகரித்தனர். மேலும் அவர்களை காவலில் எடுத்து கோவை, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் அழைத்து வந்தும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர்களின் வீடு, அவர்கள் சந்தித்துக்கொண்ட இடங்களுக்கு எல்லாம் அழைத்து சென்று விசாரித்தனர். இந்த நிலையில் முகமது அசாருதீன், அப்சர்கான், பெரோஸ்கான், முகமது தவுபிக், ஷேக் இதயத்துல்லா, சனோபர் அலி, முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 7 பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு என்.ஐ.ஏ. அதிகாரிகள் பூந்தமல்லி என்.ஐ.ஏ. கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி 7 பேரையும் 7 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார். அதனை தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் 7 பேரையும் நேற்று கோவைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்களை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் நள்ளிரவு முதல் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர். அப்போது முபின் குறித்தும், இவர்கள் வேறு எங்கு எல்லாம் இதுபோன்ற செயலை அரங்கேற்ற திட்டம் தீட்டினர், வேறு யாருக்காவது இதில் தொடர்பு உள்ளதா? முபின் உங்களிடம் கூறிய தகவல் என்ன? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் கூறிய தகவல்களை அதிகாரிகள் வீடியோ மற்றும் ஆடியோவாக பதிவு செய்து கொண்டனர்.
தொடர்ந்து அவர்களை வீடுகள் மற்றும் அவர்கள் சந்தித்து பேசிய இடங்களுக்கும் நேரில் அழைத்து சென்று விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். மேலும் இவர்கள் கூட்டம் நடத்தியதாக கூறப்படும் சத்தியமங்கலம் பகுதிக்கு அழைத்து சென்று விசாரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. தற்போது என்.ஐ.ஏ. அதிகாரிகள் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கில் இதுவரை கிடைத்த தகவல்களை அனைத்தையும் ஆவணங்களாக தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் அவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள், வீடுகளில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள், போலீசார் விசாரணையின்போது கொடுத்த ஆவணங்கள், முபின் வீட்டில் கைப்பற்றப்பட்ட பல்வேறு பொருட்களையும் ஆதாரமாக சேர்த்து குற்றபத்திரிகையினை தயாரித்து வருகின்றனர். விரைவில் இந்த வழக்கு சம்பந்தமாக குற்றப்பத்திரிகையை தயாரித்து என்.ஐ.ஏ. கோர்ட்டில் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.