தோட்டத்திற்குள் புகுந்து கன்று குட்டியை அடித்து கொன்ற சிறுத்தை..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வெள்ளியங்காடு ஊராட்சி உள்ளது. இந்த
ஊராட்சியில் முத்துகல்லூர், சுண்டகரை, பீளியூர், சோலமலை கிராமங்கள்
உள்ளன.
இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இதில் அதிகமானோர் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த
கிராமத்தையொட்டி 3 கிலோ மீட்டர் தூரத்தில் அடர்ந்த வன பகுதி உள்ளது.
அந்த வனப்பகுதியில் இருந்து அடிக்கடி சிறுத்தை, காட்டு பன்றி, யானைகள்
ஊருக்குள் புகுந்து வருகிறது. அவை விவசாயிகளின் விளைநிலங்களை
சேதப்படுத்தியும், கால்நடைகளை தாக்கியும் வருகிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் அச்சமும், கவலையும் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் முத்துகல்லூர் பகுதியை சேர்ந்த விவசாயி கிருஷ்ணசாமி. இவர் தனக்கு சொந்தமான 3 ஏக்கர் விவசாய நிலத்தில் ஆடு, மாடு, கோழி வளர்த்து வருகிறார்.
இவர் நேற்று தனது கால்நடைகளை மேய்சலுக்கு விட்டு இரவு பட்டியில் அடைத்து
வைத்து வீட்டுக்கு சென்றார். இன்று காலை வழக்கம்போல கிருஷ்ணசாமி தனது
தோட்டத்துக்கு சென்றார். அப்போது அங்கு பட்டியில் இருந்த 1½ வயது பெண் கன்று
சிறுத்தை தாக்கி இறந்து கிடந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து அவர் காரமடை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். வனத்துறையின் சம்பவ இடத்துக்கு வந்து இறந்து கிடந்த கன்றை பார்வையிட்டனர். மேலும் அங்கு சிறுத்தையின் கால் தடங்கள் பதிவாகி உள்ளதா, கன்றை சிறுத்தை தான் தாக்கியதா என ஆய்வு செய்தனர். இதுகுறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறும்போது,
இந்த பகுதியில் கடந்த சில மாதங்களாக சிறுத்தையின் நடமாட்டம் இருந்து
வருகிறது. சில நாட்களுக்கு முன்பு நாய் ஒன்றை சிறுத்தை அடித்து கொன்றது.
சுண்டகரை பகுதியில் 2 கன்றையும் அடித்து கொன்றது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் அச்சம் அடைந்து உள்ளனர். எனவே சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறையின் கண்காணித்து அதனை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்றனர்.