லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு..!

மிழகம் மட்டுமல்லாது வேறு பல மாநிலங்களிலும் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் மேற்கு வங்கம், கேரளா , சிக்கிம் போன்ற மாநிலங்களில் விற்பனை விதிகளுக்கு உட்பட்டு நடந்து வருகிறது.

லாட்டரி விற்பனையில் கோவை தொழிலதிபர் மார்ட்டின் முக்கிய பிரமுகராக உள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டில் மார்ட்டின் தொடர்புடைய 70க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள். அந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 2009 முதல் 2010 காலகட்டத்தில் சிக்கிம் மாநில லாட்டரியில் விதிகளை மீறி 910 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி இருக்கிறது என்றும் அந்த வருவாயினை 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலமாக மாற்றி முதலீடு செய்திருப்பதாகவும் வருமானவரித்துறை குற்றம் சாட்டியிருந்தது.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கேரள மாநிலத்தில் கொச்சி அமலாக்கத்துறை சட்ட விரோத பரிமாற்றத்திற்கு மார்ட்டின் மற்றும் அவரது பங்குதாரர் ஜெயமுருகன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்திருந்தது . இந்த வழக்கு தொடர்பாக மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. மார்ட்டின் நடத்தி வரும் நிறுவனங்கள் அவருக்கு சொந்தமான கட்டிடங்கள், நிலங்கள், வீடுகள் ஆகியவற்றை படிப்படியாக முடக்கி வந்தது அமலாக்கத்துறை. இதுவரைக்கும் மொத்தம் 451 கோடி மதிப்புடைய அசையும் சொத்துக்கள் மற்றும் அசையா சொத்துக்களை முடக்கி இருக்கிறது அமலாக்கத்துறை.

இந்த நிலையில் கொச்சின் அமலாக்கத்துறை மீண்டும் மார்ட்டின் மற்றும் அவரது மகன், மருமகன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வருகின்றது. சென்னை போயஸ் கார்டன் கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள மார்ட்டின் வீடு , மருமகன் அலுவலகம் உள்ளிட்ட மூன்று இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றார்கள் . இன்று காலையில் 7 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை போலீசார் உடன் சென்று சோதனை நடத்தி வருகின்றார்கள்.