உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த கோவை மாணவர் நாடு திரும்புகிறார் !!

கோவை துடியலூர் அடுத்த சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் ரவிச்சந்திரன்- ஜான்சி லட்சுமி தம்பதி வசித்து வருகின்றனர்.

இவர்களின் மூத்த மகன் சாய் நிகேஷ் இந்திய ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற லட்சியத்துடன் பல்வேறு முறை இந்திய ராணுவத்தில் சேர முயற்சித்தார். எனினும், உயரம் குறைவால் ராணுவத்தில் தேர்வாகவில்லை. இதனால், உக்ரைன் நாட்டில் விமானவியல் படித்து வந்தார்.

இதனிடையே உக்ரைன்- ரஷ்யா இடையே போர் மூழ்ந்தது. இதையடுத்து இந்திய மாணவர்கள் அனைவரும் திரும்பி வந்தனர். ஆனால் சாய்நிகேஷ், தனது இளம் வயது கனவை நிறைவேற்ற, உக்ரைன் ராணுவத்தில் இணைந்து ரஷ்யாவுக்கு எதிராக போரிட திட்டமிட்டார். சாய்நிகேஷை அவரது பெற்றோர் தொடர்பு கொண்டு ஊருக்கு அழைத்த போது, அவர் வர மறுப்பு தெரிவித்தார்.

இதுகுறித்து அவரது பெற்றோர் இந்திய வெளியுறவுத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மத்திய, மாநில அரசுகளின் உளவுத்துறையினர் சாய்நிகேஷின் பெற்றோரிடம் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் எப்படியாவது சமாதானம் செய்து தங்களது மகனை இந்தியாவிற்கு அழைத்து வர வேண்டும் என சாய் நிகேஷின் பெற்றோர் முடிவு செய்ததாக தெரிகிறது.

இதனையடுத்து, சாய் நிகேஷ் உடன் அவரது பெற்றோர் பலமுறை அவரிடமும் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் இந்தியாவுக்கு திரும்ப சம்மதம் தெரிவித்து விட்டதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து நாங்கள் இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு எங்கள் மகன் நாட்டிற்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார் என தெரிவித்தனர். இது குறித்து சாய் நிகேஷ் பெற்றோர் கூறுகையில், இந்திய தூதரக அதிகாரிகள் கூறியப்போது, எங்களை பொறுமையுடன் இருக்குமாறும், உங்கள் மகனை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர் என்றனர்.