லாரியில் கஞ்சா கடத்திய வழக்கு: 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை – 4 லட்சம் அபராதம்..!

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவை துடியலூர் சாலை வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள ராகம் பேக்கரி அருகே லாரியில் போதைப் பொருள் கடத்தி வருவதாக போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது லாரியில் பின் இருக்கையின் கீழ் 200 கிலோ கஞ்சா மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதை அடுத்து கடத்தி வந்தவரை விசாரணை செய்த போது அவர் மதுரை மாவட்டம் பெத்தானியாபுரம் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த நபரை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள இன்றியமையா பண்ட விதிகளுக்கு உட்பட்ட வழக்கியல் சிறப்பு தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு முடிவடைந்த நிலையில் நீதிபதி லோகேஸ்வரன் தீர்ப்பளித்தார். அதில் பார்த்தசாரதிக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூபாய் 4 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.