கோவை ரேஷன் கடைகளில் பறக்கும் படையினா் திடீர் ஆய்வு – 37 கடைகளுக்கு ரூ.12,175 அபராதம்..!

கோவை, சூலூா் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளில் பறக்கும் படையினா் மேற்கொண்ட ஆய்வில் இருப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களுக்காக 37 கடைகளுக்கு ரூ.12,175 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் எஸ்.பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவை மாவட்டம், சூலூர் வட்டத்தில் கூட்டுறவுத் துறை மண்டல இணைப்பதிவாளர் தலைமையில் பறக்கும் படை சார்பில் 37 கடைகளில் அண்மையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வின்போது 1,556 குடும்ப அட்டைதாரர்களிடம் நேரில் விசாரிக்கப்பட்டது. மேலும், நியாய விலைக் கடைகளில் இருப்பு, பொருள்களின் தரம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இதில் நியாய விலைக் கடைகளில் இருப்பு குறைவாக இருந்ததற்காக ரூ.5,725, இருப்பு அதிகமாக இருந்ததற்காக ரூ.3,924, போலி ரசீது போட்டதற்காக ரூ.2,525 என 37 கடைகளுக்கு ரூ.12,175 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பொருள்கள் இருப்புகளை முறையாக பராமரிக்கவும், பயனாளிகளுக்கு உரிய அளவில் பொருள்களை வழங்கவும் நியாய விலைக் கடை விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.