ஊட்டியில் வில் அம்பு சாஸ்திர முறைப்படி திருமணம் செய்து கொண்ட மணமக்கள்- பிரமிப்புடன் கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்..!

ஊட்டி: மலை பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் தோடர், இருளர், குரும்பர், காட்டுநாயக்கர், பணியர், கோத்தர் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பூர்வகுடி இன மக்களான இவர்கள் திருமண விழாக்களும், கோவில் நிகழ்ச்சிகளும் இன்றும் பழமை மாறாமல் தங்கள் முன்னோர்களின் பாரம்பரிய வழிகாட்டுதலின் முறைப்படி நடத்தி வருகின்றனர். இவர்களில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் வசிக்கும் தோடர் பழங்குடியின மக்கள் பல நூற்றாண்டை கடந்து இன்றும் பாரம்பரியமாக திருமண விழாக்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா அருகே அமைந்துள்ள கார்டன் மந்து பகுதியில் தோடர் இனத்தை சேர்ந்த நார் நஷ்குட்டன்-கிர்ந்தனா சின் ஆகியோர் தங்கள் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இயற்கையான முறையில் நடத்தப்பட்ட இந்த வில் அம்பு சாஸ்திர திருமண விழாவின்போது மணமகன் மற்றும் மணமகள் தங்கள் முன்னோர்களை வணங்கி ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து மணமகன் அடர்ந்த வனப்பகுதிக்குள் தங்களது முன்னோர்களுடன் நடந்து சென்று, வனத்திற்குள் இருந்த பூர்ஸ் என்ற சங்கரா பூ செடியில் உள்ள தண்டுகளை எடுத்து அதில் வில் அம்பை உருவாக்கி எடுத்து வந்தார்.
பின்னர் அதனை நாவல் மரத்தின் அடியில் தனது வருகைக்காக காத்திருந்த மனைவியிடம் கொடுத்தார். அப்போது மணமகள் அதை ஏற்றுக்கொண்டு நாவல் மரத்தின் அடியில் வைத்து நெய் தீப விளக்கேற்றி வில் அம்பினை வணங்கி அவரை தனது கணவனாக ஏற்று கொள்கிறாள். இதேபோன்று மற்றொரு திருமணத்தில் அர்ஜ் நேர்குட்டன்-ஆஸ்வினி சின் ஆகிய தம்பதிகளும் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள கார்டன் மந்தில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் தோடர் பழங்குடியினர் தங்கள் பாரம்பரிய உடை அணிந்து கலாச்சார நடனம் ஆடி திருமண நிகழ்ச்சியை கோலாகலமாக கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து விருந்து உபசரிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. பூங்காவிற்கு வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் தோடர் பழங்குடியினரின் வில் அம்பு சாஸ்திர திருமண நிகழ்ச்சியை பிரமிப்புடன் கண்டு ரசித்தனர்.