டெல்லியில் நடக்கும் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்கும் கோவை நாட்டிய பள்ளி மாணவிகள்..!

கோவை: வருகிற 26-ந் தேதி நாடு முழுவதும் குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லியில் நடக்கும் குடியரசு தின விழாவில் பல்வேறு மாநிலங்களின் கலாசாரத்தை எடுத்து கூறும் வாகன ஊர்வலம் மற்றும் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இந்த கலாசார நிகழ்ச்சியில் பங்கேற்பது பெரும் கவுரவமாக கருதப்படுகிறது. இந்நிலையில் வருகிற 26-ந் தேதி டெல்லியில் நடக்கும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க கோவை போத்தனூரைச் சேர்ந்த நாட்டிய பள்ளி மாணவிகள் தேர்வாகி உள்ளனர். இதில் அவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. இதுகுறித்து நாட்டிய பள்ளியின் கலை இயக்குனர் மீனாட்சி சாகர் கூறியதாவது:-
எங்கள் நாட்டிய பள்ளி மாணவிகள் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்பது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த குழுவில் மொத்தம் 10 பேர் உள்ளனர். இவர்கள் அனைவருமே கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தான். 5 பேர் வேலை பார்க்கின்றனர். 4 பேர் கல்லூரி படித்து வருகிறார்கள். ஒருவர் பள்ளி மாணவி ஆவார். குடியரசு தினவிழா அணிவகுப்பில் எங்கள் குழுவினரும் பங்கேற்க வேண்டும் என்றும் விரும்பினோம். இதற்காக முதலில் எங்கள் குழுவின் பரதநாட்டிய நடனத்தை வீடியோவாக அனுப்பி வைத்தோம். அதில் தேர்வு பெற்று தஞ்சாவூரில் நடந்த மாநில மற்றும் தென் மாநிலங்கள் அளவிலான போட்டியில் பங்கேற்றோம். அந்த 2 போட்டியிலும் வெற்றி பெற்ற பின்னர் கடந்த 4-ந் தேதி டெல்லியில் நடந்த 4-வது சுற்றுக்கு தேர்வானோம். அதிலும் வென்றோம். தற்போது டெல்லி இந்தியா கேட் அருகே, கர்தவ்யா பாதையில் நடக்க உள்ள குடியரசு தின அணிவகுப்பில் எங்கள் மாணவிகள் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.