ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை- என்ஜின் முன் உடல் சிக்கி இழுத்து வந்ததால் பரபரப்பு..

கோவை: எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூர் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் சோமனூர் ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது ரெயில் வஞ்சிப்பாளையம் அருகே வந்த போது 30 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் திடீரென்று தண்டவாளத்துக்கு நடுவே கையை மேலே தூக்கியபடி நின்றார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர் சத்தம் போட்டார். ஆனால் அவர் தண்டவாளத்தை விட்டு விலகி நிற்காமல் ரெயில் முன் பாய்ந்தார். இதில் அந்த வாலிபரின் உடல் ரெயில் எஞ்சின் கொக்கியில் மாட்டியது. சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரெயில் என்ஜின் முன் வாலிபர் உடல் சிக்கி இழுத்து வந்தது. அதன் பின்னர் ரெயிலை நிறுத்தி டிரைவர் போத்தனூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் அந்த வாலிபரின் உடலை சோதனை செய்தனர். அந்த வாலிபர் வெள்ளை கருப்பு கட்டம் போட்ட சட்டை அணிந்து இருந்தார். இதையடுத்து போலீசார் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கப்பதிவு செய்து ரெயில் முன் பாய்து தற்கொலை செய்து கொண்ட வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக அவர் தற்கொலை செய்து கொண்டார் என பல்வேறு கோணங்களில். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் காரணமாக ஒன்றரை மணி நேரம் ரெயில் தாமதமாக புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.