கோவை மாநகர காவல் துறை வாகனங்கள் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆய்வு..!

கோவை மாநகர ஆயுதப்படையில் பணிபுரியும் போலீசாருக்கு ஆண்டுதோறும் நினைவூட்டும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இது வருடாந்திர படை திரட்டு கவாத்து பயிற்சி என்று அழைக்கப்படுகிறது.இந்த நிலையில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அறிவுரையின்படி கோவை மாநகர ஆயுதப்படை போலீசாருக்கான பயிற்சி கடந்த 9ஆம் தேதி போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் தொடங்கியது ,இந்த பயிற்சியில் போலீசாருக்கு நவீன ஆயுதங்களை கையாளுதல் ,கலவரங்கள் நடைபெறும் போது கண்ணீர் புகை குண்டுகளை வீசுதல் ,அணி வகுப்பு மேற்கொள்ளுதல். கலவரம் செய்யும் கூட்டத்தை கலைப்பது ,பாதுகாப்பு பணிகள் மேற்கொள்வது, உடல் நலம் பேணுதல், கைதிகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்லுதல் உட்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது .இந்த பயிற்சியை மாநகர ஆயுதப்படையைச் சேர்ந்த 550 போலீசார் மேற்கொண்டனர். கடந்த 15 நாட்களாக நடைபெற்று வந்த இந்த பயிற்சி நேற்று முடிவடைந்தது .இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று மாலை நடந்த இந்த பயிற்சி முகாம் நிறைவு விழாவில் பங்கேற்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார் .மாநகர போலீசார் பயன்பாட்டில் உள்ள அனைத்து வாகனங்கள், ஆயுதங்களின் தயார் நிலை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார் .பின்னர் போலீசாரின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். மேலும் போலீசார் மற்றும் போலீஸ் வாகன டிரைவர்களுக்கு கமிஷனர் பாலகிருஷ்ணன் அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஆயுதப்படை துணை கமிஷனர் முரளிதரன், உதவி போலீஸ் கமிஷனர் சேகர் ,இன்ஸ்பெக்டர்கள் பிரதாப் சிங், கோவிந்தராஜு உட்பட பலர் கலந்து கொண்டனர்.