இந்தியாவுக்கு திட்டமிட்டபடி சொன்ன தேதியில் எஸ்-400 கிடைக்கும்- ரஷ்யா உறுதி..!

புதுடெல்லி: அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி, ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை தடுப்பு சாதனைங்களை ரூ.40 ஆயிரம் கோடி செலவில் இந்தியா வாங்குகிறது.

இதற்கான ஒப்பந்தம், கடந்த 2018ம் ஆண்டு ஏற்பட்டது. இதன் முதல் கட்டமாக, கடந்தாண்டு டிசம்பரில் முதல் எஸ்-400 சாதனத்தை ரஷ்யா ஒப்படைத்தது. சீனா, பாகிஸ்தான் உடனான சர்வதேச எல்லையில் இந்திய இதை தற்போது நிறுத்தியுள்ளது. இந்நிலையில், உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக, இந்தியாவுக்கு மற்ற 4 எஸ்-400 ஏவுகணை தடுப்பு சாதனங்களை ரஷ்யா வழங்குவதில் தாமதம் ஏற்படும் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன.

லடாக் எல்லையில் சீனாவுடன் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், அதற்கு பதிலடி கொடுப்பதற்கு எஸ்-400 முக்கியமாக தேவைப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் நேற்று அளித்த பேட்டியில், ‘இந்தியாவுக்கு எஸ்-400 ஏவுகணை தடுப்பு சாதனைகள், திட்டமிட்டபடி குறிப்பிட்ட காலகெடுவுக்குள் வழங்கப்படும். உக்ரைன் போரினால் இந்தியாவுக்கு இவற்றை வழங்குவதில் எந்த தாமதமும் ஏற்படாது. அதற்கேற்ற மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது,என்று தெரிவித்தார்.