டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் பீர் விலை உயர்கிறது… எவ்வளவு தெரியுமா..?

மிழகத்தில் 4,829 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. டாஸ்மாக் கடைகளில் 43 சாதாரண வகை, 49 நடுத்தர வகை, 128 பிரீமியம் வகை பிராண்டுகள், 35 வகையான பீர், 13 ஒயின் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன.

இதுதவிர, ‘எலைட்’ டாஸ்மாக் கடைகள் மூலம் பிரத்யேகமாக வெளிநாட்டு மதுபானங்கள் விற்கப்படுகின்றன.

டாஸ்மாக் கடைகளில் குவார்ட்டர் பாட்டில் ரூ.130, ஆஃப் பாட்டில் ரூ.260, ஃபுல் பாட்டில் ரூ.520 என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. மீடியம் ரேஞ்ச் மதுபானங்கள் ரூ.160 முதல் ரூ.640 வரை விற்கப்படுகின்றன.

ஆண்டுதோறும் மதுபானங்களின் விலையை டாஸ்மாக் நிர்வாகம் அதிகரித்து வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில், பிப்ரவரி மாதம் முதல் மதுபானங்களின் விலையை உயர்த்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. எனவே, 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக குவாட்டர் பாட்டில் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், 180 மி.லி கொண்ட அளவு கொண்ட உயர்ரக குவாட்டர் பாட்டில் விலை ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 650 மி.லி. அளவு கொண்ட பீர் வகைகளின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது.

மேற்கண்ட விலை உயர்வின் அடிப்படையில் 375மி.லி., 750மி.லி., 1000 மி.லி. கொள்ளளவுகளில் விற்கப்படும் மதுபான ரகங்களும் 500மி.லி., 325மி.லி. கொள்ளளவுகளில் விற்கப்படும் பீர் வகைகளும் அந்தந்த ரகத்துக்கும் மற்றும் கொள்ளளவுக்கும் ஏற்றவாறு விலை உயர்த்தப்பட்டு விற்கப்படும்.