நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நெடுகுளா, உயிலட்டி, கேர்க்கம்பை, காக்கா சோலை, மிளிதேன் உள்ளிட்ட பகுதிகளில் மேரக்காய் விவசாயம் நடந்து வருகிறது.
இங்கு பயிரிடும் மேரக்காய்கள் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதுதவிர வியாபாரிகளும் நேரடியாக வந்து கொள்முதல் செய்தும் செல்கின்றனர். தற்போது தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த 3 வாரங்களாக அவ்வப்போது மிதமானது முதல் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் நீர்வரத்து அதிகரித்து நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.
தொடர் மழையால் மேரக்காய் விளைச்சல் அதிகரித்து காணப்படுகிறது. விவசாயிகளும் மேரக்காயை பறித்து விற்பனை செய்து வருகின்றனர். விளைச்சல் இருக்கும் அதே வேளையில், மேரக்காயுக்கு குறைந்த விலையே கிடைப்பது விவசாயிகளுக்கு கவலை அளித்துள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
தற்போது மேரக்காய் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனை பறித்து கோத்தகிரி, ஊட்டி மற்றும் கோவையில் உள்ள சந்தைகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்கிறோம். ஆனால் விலை குறைந்து காணப்படுகிறது. முன்பு சந்தைகளில் மேரக்காய் கிலோ ஒன்றிற்கு ரூ.20 முதல் ரூ.25 விலை கிடைத்த நிலையில் தற்போது மேரக்காய் ரூ.10 முதல் ரூ.13 வரை மட்டுமே விற்பனையாகிறது. இது எங்களுக்கு கவலையாக உள்ளது. மிகக் குறைந்த விலை கிடைப்பதால், விவசாயிகள் வண்டி வாடகை, பணியாட்கள் கூலி,முதலீடு ஆகியவைகளை ஈடுகட்ட முடிவதில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Leave a Reply