அமைச்சர் நேரு- திருச்சி சிவா ஆதரவாளர்கள் காவல் நிலையத்தில் அத்துமீறி நுழைந்து தாக்குதல்.. பெண் காவலருக்கு எலும்பு முறிவு..!

திருச்சி: திருச்சி காவல் நிலையத்தில் அமைச்சர் கே.என்.நேரு – திருச்சி சிவா ஆதரவாளர்களிடையே மோதல் சம்பவம் ஏற்பட்ட நிலையில் பெண் போலீஸ் ஒருவர் காயமடைந்துள்ளார்.

திருச்சி எஸ்பிஐ காலனியில் நமக்கு நாமே திட்டத்தில் இன்று புதிய டென்னிஸ் அரங்கை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைக்க வந்திருந்தார். அந்த திறப்பு விழா கல்வெட்டிலும் திருச்சி எம்பி சிவாவின் பெயர் இல்லாமல் இருந்தது.

இதனால் டென்னிஸ் அரங்கு திறப்பு விழாவிற்கு திருச்சி எம்பி சிவாவிற்கு அழைப்பு கொடுக்க வேண்டும் என திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பினர். மேலும் அமைச்சர் நேருவின் காரை வழிமறித்த சிவா ஆதரவாளர்கள் அமைச்சருக்கு கருப்பு கொடி காட்டி அவருக்கு எதிராக கோஷமிட்டனர். இந்த விழா நிகழ்விடத்திற்கு திருச்சி சிவா வீட்டின் வழியாகத்தான் செல்ல வேண்டும். இதனால் விழா முடிந்து அவ்வழியாக சென்ற அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி சிவா வீட்டிற்கே குவிந்தனர்.

அங்கு வீட்டின் முன்பக்கம் நிறுத்தபட்டிருந்த காரின் மீது கற்களை வீசினர். அது போல் ஜன்னல் கண்ணாடிகளையும் உடைத்தனர். இதில் வீட்டு வாசலில் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் நாற்காலிகள், இரு சக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதாத தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் அமைச்சர் நேருவின் காரை வழிமறித்த சம்பவத்தில் திருச்சி சிவா ஆதரவாளர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

அது போல் திருச்சி எம்பி சிவாவின் வீடு மீது அமைச்சர் கே.என். நேரு ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாக சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் திருச்சியில் நீதிமன்ற காவல் நிலையத்தில் புகுந்த திருச்சி சிவா ஆதரவாளர்கள் மீது அமைச்சர் நேரு தரப்பு தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு திருச்சி சிவா ஆதரவாளர்களும் தாக்குதல் நடத்தினர்.

காவல் நிலையத்திற்குள் இருந்த நாற்காலியை எடுத்து திருச்சி சிவா ஆதரவாளர்கள் மீது அமைச்சர் நேரு ஆதரவாளர்கள் வீசியுள்ளனர். இந்த தாக்குதலை தடுத்த பெண் போலீஸ் சாந்தி காயமடைந்தார். அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் திருச்சி திமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீண்ட காலமாக திருச்சி சிவாவுக்கும் அமைச்சர் நேருவுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் அது இன்று அவர்களது ஆதரவாளர்களால் வன்முறையாக வெடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசிய போது பொழுது விடிந்தால் யார் எந்த பிரச்சினையை இழுத்து வருவார்களோ என இரவில் தூக்கம் வரவில்லை என கூறியிருந்த நிலையிலும் அமைச்சர்கள் சிலர் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதை தவிர்க்கவில்லை. இத்தனை நாட்கள் எங்காவது திமுகவினர் அடிதடியில் ஈடுபட்டனர் என்றுதான் செய்தி வந்தது. ஆனால் இன்று திமுகவினருக்குள்ளேயே அடிதடி ஏற்பட்டுள்ளது. இது அறிவாலயத்தை கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசுவும் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரனும் ஒற்றுமையாக செயல்படுவதாக பலர் கூறி வரும் நிலையில் இது போல் திருச்சியில் ஒரே மாவட்டத்தை சேர்ந்த எம்பி சிவாவும் அமைச்சர் நேருவும் மோதல் போக்கில் இருப்பது கட்சியின் மூத்த நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இரு தரப்பினரிடமும் கட்சி சார்பில் விளக்கம் கேட்டு எச்சரிக்கை விடுக்கப்படும் என தெரிகிறது.