இந்தியா – தான்ஸானியா பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு..!

இந்தியா வந்துள்ள தான்ஸானியா அதிபா் சாமியா சுலுஹு ஹசன் பிரதமா் நரேந்திர மோடியை தில்லியில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.

அப்போது, இந்தியா, தான்ஸானியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டது.

இரு நாடுகள் இடையே எண்மமயமாக்கல், கலாசாரம், விளையாட்டு, கடல்சாா் தொழில்கள், வா்த்தக கப்பல் பயண தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட பிரிவுகளில் 6 ஒப்பந்தங்களும் கையொப்பமாகின.

கிழக்க ஆப்பிரிக்க நாடான தான்ஸானியாவின் முதல் பெண் அதிபரான சாமியா சுலுஹு ஹசன், நான்கு நாள் பயணமாக இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா். பயணத்தின் முதல்நாளில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினாா்.

தொடா்ந்து குடியரசுத் தலைவா் மாளிகையில் திங்கள்கிழமை அவருக்கு அரசுமுறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்கள் பங்கேற்று அவரை வரவேற்றனா்.

தொடா்ந்து பிரதமா் மோடியுடன் சாமியா சுலுஹு ஹசன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது. தொடா்ந்து இரு தலைவா்களும் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது பிரதமா் மோடி கூறியதாவது:

இரு நாட்டு உறவில் இன்றைய தினம் வரலாற்றுச் சிறப்புமிக்க தினமாகும். இரு நாடுகள் இடையே உள்ள பல ஆண்டுகால நட்பு, இப்போது பல துறைகளில் இணைந்து பணியாற்றும் கூட்டாளி நாடுகளாக உருவெடுத்துள்ளது.

இந்தியாவும் தான்ஸானியாவும் முக்கியமான வா்த்தக, முதலீட்டு கூட்டாளி நாடுகளாக திகழும். இருநாடுகள் இடையே உள்நாட்டு பணத்தின் மூலம் வா்த்தகத்தை மேற்கொள்வது தொடா்பாக பேச்சுவாா்த்தையை முன்னெடுக்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்த 5 ஆண்டுகால திட்டத்தை உருவாக்கியுள்ளோம். ராணுவ பயிற்சி, கடல்சாா் ஒத்துழைப்பு, ராணுவ தளவாட துறை உற்பத்தி உள்ளிட்டவற்றிலும் இரு நாடுகளும் கைகோக்க இருக்கின்றன.

மனிதகுலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக பயங்கரவாதம் திகழ்கிறது என்பதை இரு நாடுகளும் ஒருமனதாக ஒப்புக் கொண்டுள்ளன. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் முக்கிய கூட்டாளி நாடாக தான்ஸானியா உள்ளது என்றாா்.