உதவி வேண்டி கோட்டைக்கு வந்த பாட்டி – உடனே தீர்த்து வைத்த முதல்வர் ஸ்டாலின்..!

சென்னை: திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல், கல்வித்துறை கண்விழித்துவிட்டது. இந்தியாவிலேயே உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடுதான் முதலிடம். இது தானாக கிடைக்கவில்லை.

அதற்குப் பின்னால் அரசின் கடுமையான திட்டங்கள் உள்ளன. முதல்வர் ஸ்டாலினின் முழுமையான உழைப்பு ஒளிந்திருக்கிறது.

ஆகவேதான், அரசுப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை படித்துவிட்டு கல்லூரி படிப்பிற்குச் செல்லும் மாணவிகளுக்கு மாதம் தலா ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தார் ஸ்டாலின். கடந்த 5 மாதங்களில் மட்டும் 1 லட்சத்து 56 ஆயிரம் மாணவிகள் இதனால் பயனடைந்துள்ளனர். வரும் ஆண்டில் இந்தப் ‘புதுமைப் பெண்’ திட்டம் மூலம் மேலும் 1,04,347 மாணவிகள் பயன்பெற உள்ளனர்.

“மக்கள் இந்த அரசின் மீது நம்பிக்கை வைத்துதான் தங்களின் கோரிக்கைகளை புகார்களாகக் கொடுக்கிறார்கள். அதை நாம் வெறும் காகிதங்களாகப் பார்க்கக் கூடாது. அதை அவர்களின் வாழ்வாதாரமாகப் பார்த்து அவற்றின் மீது உடனடியாக தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டு மேடைகளில் பலமுறை பேசி இருக்கிறார் ஸ்டாலின்.

கோட்டையில் நேரடியாகப் பெறப்படும் மனுக்கள் மூலமாக பலன்பெற்றவர்கள் பலர் உள்ளனர். அதற்கு சமீபத்திய சான்றுதான் சியாமளா பாட்டி.

வழக்கமாக கோட்டைக்கு பல்வேறு கோரிக்கை மனுக்கள் வருகின்றன. அப்படி பழைய வண்ணாரப்பேட்டையில் இருந்தது ஒரு மனு வந்தது. ஒரு பாட்டி தனது பேத்தியின் படிப்புக்காக சாதிச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துவிட்டு, பல ஆண்டுகளாகக் காத்திருக்கிறேன் என்று அவரது மனுவில் கூறியிருந்தார்.

தனது பேத்திக்காக சாதிச்சான்றிதழ் கிடைக்காமல் அலைந்தப் பாடிக்கு, இன்று வீடு தேடி சான்றிதழ் வந்துள்ளது. அதுவும் ஒரே வாரத்தில். இது எப்படி சாத்தியம்? அவர் எங்கே முறையிட்டார்? யாரை சந்தித்தார்? எல்லா விவரங்களையும் பாட்டியே சொல்கிறார்.

“என் பெயர் சியாமளா. என் வீட்டுக்காரர் பெயர் தீனதயாளன். பழைய வண்ணாரப்பேட்டையில் இருக்கின்ற குடிசையில் வாழ்ந்து வருகிறேன். நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் இந்தப் பகுதியில்தான். எனக்கு இரண்டு பையன்கள். ஒரு பையனுக்கு காது கேட்காது. வாய்ப் பேசவும் முடியாது. கூலி வேலைக்குப் போகிறான். அவனுக்கு தினம் 100 ரூபாய் கூலியாக கிடைக்கும். அதைக் கொண்டுவந்து கொடுப்பான்.

பெரிய மகனுக்கு இரண்டு பிள்ளைகள். அந்த மகனுக்கு கை கால்கள் செயல் இழந்துவிட்டது. ஆகவே அந்தக் குழந்தைகளை நான்தான் வளர்த்து வருகிறேன். என் பேத்தி பெயர் மகா. பேரன் பெயர் மனோகர். இரண்டு பேரையும் மாநகராட்சிப் பள்ளியில் சேர்த்துவிட்டேன். அவர்களை வளர்ப்பதற்காக நானும் கூலி வேலைக்குப் போய் வருகிறேன். வாய்ப் பேச முடியாத மகனின் சம்பாத்தியமும் என் சம்பாத்தியமும்தான் வீட்டுச் செலவுக்குப் பயன்பட்டு வருகிறது.

எப்படியோ இத்தனை வருடங்களாக இவர்களைக் காப்பாற்றி வளர்த்துவிட்டேன். இப்போது பிள்ளைகள் நன்றாகப் படிக்கிறார்கள். அரசாங்க உதவி பெறுவதற்காக சாதிச் சான்றிதழ் வேண்டி அரசு அதிகாரிகளைப் பார்க்கப் போனேன். பலரும் சாதிச்சான்றிதழ் அவ்வளவு லேசில் கிடைக்காது என்றார்கள்.

எனக்கும் நம்பிக்கை இல்லை. எதற்கும் முயற்சி செய்து பார்ப்போமே என்றுதான் அதிகாரியைப் பார்க்கப் போனேன். அங்கு பல நாள்கள் அலைந்தேன். சரி, நாம் நேராக கோட்டைக்குப் போய் மனு கொடுத்து பார்ப்போம் என்று ஒருநாள் போனேன். அங்குப் போய் ஒரு மனு எழுதிக் கொடுத்தேன்.

அப்போது அங்குள்ளவர்கள் ‘என்ன பிரச்சினை’ என்று விசாரித்தார்கள். என் நிலைமையை சொன்னேன். பிள்ளைகளுக்கு ஸ்காலர்ஷிப் கிடைத்தால், மேற்கொண்டு படிக்க வைக்க உதவியாக இருக்கும். அதற்குச் சாதிச்சான்றிதழ் கேட்கிறார்கள். கொடுத்து உதவுங்கள். பல நாள்களாக அலைகிறேன் என்றேன். உடனே அவர்கள் தேவையான உதவியை செய்து கொடுத்தார்கள்” என்கிறார்.

இது குறித்து பேத்தி மகா, “நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன். அம்மா ஹோட்டல் வேலை செய்கிறார். என்னை ஆயாதான் வளர்க்கிறார். அப்பா பெயர் கோபி. அவருக்கு உடல்நிலை சரியாகயில்லை. அவரால் நடக்க முடியாது. வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறது.

ஆகவே அம்மா வேலைக்குப் போய்தான் வீட்டைக் காப்பாற்றுகிறார். எங்கள் அப்பாவையும் வைத்து கொண்டு எங்களையும் வைத்து கொண்டு அம்மாவால் சமாளிக்க முடியவில்லை. அம்மாவுக்கு கஷ்டம் தரக்கூடாது என்றுதான் ஆயா வீட்டுக்கு நாங்கள் வந்துவிட்டோம்.

சாதிச் சான்றிதழ் கேட்டுத்தான் ஆயாவுடன் கோட்டைக்குப் போனேன். அங்கு கோரிக்கையை மனுவாக கேட்டார்கள். எழுதிக் கொடுத்தோம். அதை வாங்கிக் கொண்டு வேறு ஒரு அதிகாரியிடம் அனுப்பினார்கள். அங்குப் போனோம். வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட வேறு சில ஆவணங்களைக் கேட்டார்கள். நான் அப்பா நிலைமையையும் வீட்டு நிலைமையையும் எடுத்து சொன்னேன்.

‘சரி, வீட்டுக்கு விசாரணைக்காக அதிகாரிகள் வருவார்கள். அதன்பிறகு தாசில்தார் உங்களுக்கான சாதிச்சான்றிதழை தருவார்கள்’ என்றார்கள். அதைப்போலவே விசாரிக்க அதிகாரிகள் வந்தார்கள். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு ஒரு வாரம் கழித்து அவர்களே சாதிச்சான்றிதழை வீட்டுக்கு கொண்டுவந்து கொடுத்தார்கள்” என்கிறார்.

“சாதிச்சான்றிதழ் கிடைத்ததும் உடனே கோட்டையிலுள்ள அதிகாரிக்கு போன் செய்து நன்றி சொன்னேன். அவர், ‘எனக்கு சொல்ல வேண்டாம். முதல்வர் ஸ்டாலினுக்கு சொல்லுங்கள்’ என்றார் எனக் கூறுகிறார் பாட்டி.

மேலும் அவர் தொடர்ந்தார்,”பலரும் 8 ஆயிரம் ஆகும். 10 ஆயிரம் ஆகும் என்று பயமுறுத்தினர். என்னால் அவ்வளவு பெரிய தொகையை எப்படி செலவு செய்ய முடியும் என்று பயந்து கொண்டிருந்தேன்.

ஆனால் இவ்வளவு சீக்கிரமாக இந்தச் சான்றிதழ் கிடைக்கும் என நினைக்கவே இல்லை. கோட்டைக் கதவை தட்டிய உடனேயே ஒரு வாரத்தில் செய்து கொடுத்திருக்கிறார்கள். அதற்காக முதல்வர் அய்யா ஸ்டாலினுக்கு நன்றி” என்கிறார் பாட்டி சியாமளா.

“எனக்கு வழக்கறிஞர் ஆகவேண்டும் என்றுதான் ஆசை. நான் ஏன் வழக்கறிஞர் ஆகவேண்டும் என்று ஆசைப்படுகிறேன் தெரியுமா? ஒருவரிடம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றும் அந்த மோசடிப் பேர்வழிகளை சட்டரீதியாக தண்டனை வாங்கி தரவேண்டும். அதற்காகத்தான் நான் வழகறிஞராக வேண்டும் என நினைக்கிறேன்” என்கிறார் பேத்தி. சமூகநீதி ஆட்சி அவருக்கு உதவியது. அவர் சமுகத்திற்கு உதவுவேன் என்கிறார். இந்தக் கனவுதான் தமிழ்நாட்டின் தனித்துவம்.