கொள்ளை வழக்கில் தீர்ப்பை கேட்டதும் தப்பி ஓடிய கைதியால் கோவை நீதிமன்றத்தில் திடீர் பரபரப்பு.!!

கோவை ரங்கே கவுடர் வீதியில் ,மங்கள் ராம் என்பவர் பான் மசால் குடோன் நடத்தி வந்தார் .இங்கு கடந்த 2- 12 – 2019 அன்று புகுந்த 11 பேர் கொண்ட கும்பல் குடோனில் வேலை செய்த கிருஷ்ணா ( வயது 30 )என்பவரை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பணம் மற்றும் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 4 பண்டல் பான் மசாலாவை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றது. இது தொடர்பாக கோவையை சேர்ந்த புஷ் அபுதாகிர் ( வயது 28) ஆஷிக் அலி (வயது 30) ,ஜிம் ஹக்கீம் ( வயது 30) உட்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அந்த வழக்கு சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது .நேற்று தீர்ப்பு கூறுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த வழக்கில் ஏற்கனவே கைதாகி ஜாமினில் இருந்த புஷ் அபுதாகிர் கோவை கோர்ட்டுக்கு வந்திருந்தார்.. வழக்கை விசாரித்த நீதிபதி நம்பிராஜன் குற்றம் சாட்டப்பட்ட புஷ் அபுதாகிர் ,ஆசிக் அலி, ஜிம் ஹக்கீம் ஆகியோருக்கு தலா 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். தீர்ப்பை கேட்டதும் அதிர்ச்சியடைந்த புஷ் அபுதாகீர் நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதை பார்த்ததும் சி.பி.சி.ஐ.டி போலீசார் மற்றும் நீதிமன்ற வளாகத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து நீதிபதி நம்பிராஜனிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் புஷ் அபுதாகீரை பிடிக்க பிடிவாண்டு உத்தரவு பிறப்பித்தார். ஏற்கனவே தண்டனை விதிக்கப்பட்ட ஜிம் ஹக்கீம், ஆஷிக் அலி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். தப்பி ஓடிய புஷ் அபுதாகீரை சி.பி. சி ஐ.டிபோலீசார் தேடி வருகிறார்கள். நீதிமன்றத்தில் கைதி தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.