கேரளாவில் ஜூன் 1ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை – வானிலை மையம் கணிப்பு..!

டெல்லி : தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 1ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் நிறைவடைகிறது. இந்த 4 மாதங்களில் பெய்யும் மழையை இந்திய விவசாயிகள் பிரதானமாக நம்பி இருக்கின்றனர். அதன்படி இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 1ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்தமான் கடலில் மே 20ம் தேதி தொடங்கும் பருவமழை பின்னர் கேரளாவை வந்தடையும் என்றும் ஜூன், ஜூலை மாதங்களில் கேரளாவில் பருவமழை அதிகளவு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் கேரளாவில் ஆகஸ்ட் மாதத்தில் அதிக மழைப்பொழிவு இருந்த நிலையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மழைப்பொழிவு குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. பருவகாலத்தின் 2வது பாதியில் மேகவெடிப்பு எனப்படும் எல் நினோவின் தாக்கம் காரணமாக மழைப்பொழிவு குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை சராசரியாக 83.5 செமீ மழைப் பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது..