சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து: ரூ.3 லட்சம் நிதியுதவி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.!!

ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன் என முதலமைச்சர் அறிவிப்பு.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மாரனேரி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். செல்வஜோதி பயர் ஒர்க்ஸ் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் அறை தரைமட்டமாகிய நிலையில், ஒருவர் பலியானார். இந்த நிலையில், சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த அரவிந்த் (32) என்பவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், மாரனேரி கிராமத்தில் இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் மாதன்கோவில்பட்டியைச் சேர்ந்த அரவிந்த் என்பவர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகவும் வேதனையடைந்தேன். உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.